Saturday, May 27, 2006

காதலித்துப் பார் - 7

கனவுகளை உடுத்துவாய்..
உடனிருப்பவர்களைப் படுத்துவாய்...

ஒப்புக்கொண்டு மறுப்பாய்...
மறுத்துக்கொண்டே ஒப்புவாய்....

Labels:

 
posted by Raghavan alias Saravanan M at 5/27/2006 01:30:00 PM, | 0 பின்னூட்டங்கள்

காதலித்துப் பார் - 6

சில பொழுதுகள் தனிமை உணர்வாய்
பல பொழுதுகள் வெறுமை உண்பாய்....

மூச்சுக் காற்றின் முழு விகிதக்தைக் கணக்கெடுக்க முயல்வாய்......

Labels:

 
posted by Raghavan alias Saravanan M at 5/27/2006 01:29:00 PM, | 0 பின்னூட்டங்கள்

காதலித்துப் பார் - 5

விட்டுக் கொடுப்பாய், தட்டியும் கொடுப்பாய்!!

உன்னுயிர் உன் கண்ணெதிரே நடமாடக் காண்பாய்!
கணினிக் காலத்திலும் கூடுவிட்டுக் கூடுபாயும் வித்தை காண்பாய்!

Labels:

 
posted by Raghavan alias Saravanan M at 5/27/2006 01:11:00 PM, | 0 பின்னூட்டங்கள்

மதுமிதா - தங்கள் புத்தகத்தின் என் பக்கமிதா?

வலைப்பதிவர் பெயர்:
இராகவன் என்ற சரவணன் மு. (பெற்றோர் இட்ட பெயரே என்றும் எங்கும் எதிலும் முழுமையாக வழங்கப்பெறுகிறது). செல்லப்பெயர் உண்டு. புனைப்பெயர் இல்லை.

வலைப்பூ(க்களின்) பெயர் :
கவிதை கேளுங்கள், வாய் விட்டு சிரித்தால், திரைப்படப் பாடல் வரிகள், பக்திப் பாடல் வரிகள், இயன்ற அளவு உதவலாமே

சுட்டி(url) :
http://kavithaikealungal.blogspot.com,
http://vaaivittusiriththaal.blogspot.com,
http://thiraippadap-paadal-varigal.blogspot.com,
http://bhakthip-paadal-varigal.blogspot.com,
http://iyandra-alavu-udhavalaamae.blogspot.com
(எத்தனை வலைப்பூக்கள் இருந்தாலும் அனைத்தையும் ஒரே பதிவில் அளிக்கலாம்)

ஊர்:
பிறந்து, தவழ்ந்து, வளர்ந்த ஊர் - காரைக்குடி
படித்துப் பட்டம் பெற்ற ஊர் - கோயம்புத்தூர்
தற்பொழுது வயிற்றுப் பிழைப்புக்காக - பெங்களூர்

நாடு:
எங்கள் பாரத தேசமென்று தோள் கொட்டுவோம்...

வலைப்பூ அறிமுகம் செய்தவர்:
என் தேடும் திறனும் கூகு(கி)ள் இணையத்தளமும்

முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் :
23 செப்டம்பர் 2004 (ஆனால் அந்த வலைப்பூ தற்பொழுது உபயோகத்தில் இல்லை[ http://raghzkirukkals.blogspot.com]... பெயர்ச் சீரமைப்பு வேண்டிக் 'கவிதைகேளுங்கள்' என்ற வலைப்பூவைச் சில மாதங்களுக்கு முன்னால் ஆரம்பித்திருக்கிறேன். )

இது எத்தனையாவது பதிவு:
வலைப்பூக்களின் தோகையில் இது 22 ஆவது சிறகு (தங்களுக்கான பதிவு)

இப்பதிவின் சுட்டி(url): http://kavithaikealungal.blogspot.com/2006/05/blog-post_114871380372190392.html

வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்:
எண்ணங்களை ஏடேற்றும் எளிய முயற்சிகளில் இதுவும் ஒன்று.. எனினும் என் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள, நிறைய நட்புள்ளங்களைச் சந்திக்க, தமிழ்ப்பிரியர்களை இணையத்தில் தரிசிக்க இப்படிச் சிலவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம்

சந்தித்த அனுபவங்கள்:
உள்ளூர உணர்ந்து துய்ப்பதற்கு முன்னே என்னுள் ஏதேதோ எழுதிவிட்டு மறைந்துவிடுகின்றன..அவற்றின் அர்த்தம் 'அனுபவம்' என்ற சொல்லப்பட்டுச் சொறிந்து கொள்கிறேன் நான்.

ஆயினும் விடாது முயற்சிக்கிறேன் ஒவ்வொரு நாளிலும், நிகழ்விலும், நபரிடமும்....

பெற்ற நண்பர்கள்:
ஏராளம் - இணைய அரட்டையில், மின்னஞ்சல் அளவளாவல்களில், தொலைபேத் தொடர்புகளில் என்று பல்வேறு ஊடகங்கள் வாயிலாக.. இயல்பாகக் கலகலப்பாகப் பேசுவதின் பலனாய்ப் பெருமிதப்படுகிறேன்.

கற்றவை:
கைம்மண் அளவு ...

கற்க வேண்டியவை என ஒரு பத்தி விட்டிருக்கலாம் நீங்கள்..
எனில் அதற்கு : கடலளவு...

எனினும் தங்கள் கேள்வி நோக்கம் நிறைவேற்றும் பொருட்டு:

(1) தொழில்நுட்பப் படிப்பு - மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பியல் (ஆங்கிலத்தில் DECE - Diploma in Electronics and Communication Engineering) - காரைக்குடி அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரியில் ஏப்ரல் 1999ல் பட்டம் பெற்றேன்....

(2) பொறியியல் படிப்பு - தகவல் தொடர்பியல் (ஆங்கிலத்தில் BE in IT - Bachelor of Engineering in Information Technology) - கோவை மாநகரின் அமிர்தா பொறியியல் கல்லூரியில் மே 2003ல் படித்துப் பட்டதாரி ஆனேன்...

(3) முதுகலைப் படிப்பு - தற்பொழுது இராஜஸ்தானில் உள்ள பிர்லா தொழில்நுட்பக் கல்லூரியில் முதுகலை - மென்பொருள் (ஆங்கிலத்தில் MS in Software Systems in Birla Institute of Technology and Science, Pilani) படித்துக் கொண்டிருக்கிறேன்.. இவ்வாண்டு நவம்பரில் பட்டம் பெற்றிடுவேன்..

இது தவிரத் தட்டச்சுப் படிப்பு (தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் முதுநிலை), நம் தேசிய மொழியாம் இந்தி (பெற்றோருக்கு முதற்கண் நன்றி).

கவிதை எழுதுவதற்கு (பாராட்டி, திருத்தி, ஆதரவளித்த மற்றும் ஆதரவளித்துக் கொண்டிருக்கும் அனைத்து நேச நெஞ்சங்களுக்கும் என் மனப்பூர்வமான நன்றிகளைக் காணிக்கையாக்குகிறேன்). என்னைச் செதுக்கிக் கொண்டிருக்கும் உளிகள் அவர்கள் தாம்....

எழுத்தில் கிடைத்த சுதந்திரம்:
சில்லென்ற காற்று சிநேகமாய்க் குசலம் விசாரிக்கையில் முகத்தின் தசைகளில் குறைகின்ற இறுக்கம் அப்படியே என் உணர்வுகள் அனைத்திலும் வியாபித்திருக்கின்றன... ஆயினும் சுதந்திரம் என்ற சொல்லின் எல்லைகளை வரையறுப்பது முற்றிலும் தனிப்பட்ட விஷயம்! எனினும் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளும் பக்குவம் வளர்கிறது! கட்டுக்கோப்போடு கூடிய கட்டுக்குலையாத சுதந்திரம்!

இனி செய்ய நினைப்பவை:
முடிந்த வரை சிந்தனைச் சிறகுகளைச் சமுதாயத்தின் முன்னேற்றத்தை நோக்கி நடைபோட வைப்பது, எழுத்துக்களையும் எண்ணங்களையும் இன்னும் மெருகேற்றுவது.. ஏனோ நானும் எழுதுகிறேன் என்றிராது 'என் எழுத்தின் பயன் என்ன' என்ற எண்ணத்துடன் எழுதுவது!!

என்றும் என்னால் முடிந்த உதவிகளைப் பிறருக்குச் செய்வது!

உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு:
கொஞ்சம் கொஞ்சமாக முந்தைய பத்திகளில் தந்துவிட்டேன் என்னை! சேர்த்துப் படித்தால் கதம்பமாய் நான் உலாவருவேன் உங்கள் எண்ணவீதிகளில்...

இன்னும் நீங்கள் சொல்ல நினைக்கும் ஒன்றைச் சேர்க்கலாம்:
"பிறருக்காகச் சிந்தப்படும் போது நம் கண்ணீர் கூட இனிக்கிறது".. ஆகவே முடிந்தவரை நம்மாலான சிறுசிறு உதவிகளைப் பிறருக்குச் செய்து நம் பிறவியின் பயனைச் சிறிதளவாவது செப்பனிடுவோமாக....

தமிழ் உள்ளங்களுக்கு அன்பர்களின் வலைப்பதிவுச் சேர்க்கை நல்லதொரு பயனை அளித்திடவும், தங்களின் இந்த முயற்சி முழு வெற்றி கண்டிடவும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்..
 
posted by Raghavan alias Saravanan M at 5/27/2006 12:37:00 PM, | 4 பின்னூட்டங்கள்

காதலித்துப் பார் - 4

அவஸ்தையாய்ப் புன்னகைப்பாய்....

சிந்தை தனைச் சிதறடித்த சின்னச் சின்னச்
சில்மிஷப் புன்னகைகளையும் சேமிப்பாய்!

Labels:

 
posted by Raghavan alias Saravanan M at 5/27/2006 12:35:00 PM, | 0 பின்னூட்டங்கள்

காதலித்துப் பார் - 3


வாழ்வின் முதல்முறையாகச் சில
விஷயங்களைத் துய்ப்பாய்!!

காத்திருக்கக் கற்றுக் கொள்வாய்..

மன்னித்துக் கொண்டே தண்டிப்பாய்

தண்டித்துக் கொண்டே மன்னிப்பாய்

Labels:

 
posted by Raghavan alias Saravanan M at 5/27/2006 12:26:00 PM, | 0 பின்னூட்டங்கள்

புகைப்படக் கவிதை - தான் ஆடாவிட்டாலும்

நண்பர்களே,

கீழே உள்ள படத்தைப் பார்த்ததும் என்னுள் பிரசவித்த கவிதை... புகைப்படத்திற்கு நன்றி ரசிகவ்.. (அன்புடன் குழுமத்தில்)


பிரபஞ்சத்தில் என்னுடைய
இருப்பும் எண்ணிக்கையில்
சேர்த்துக் கொள்ளப்பட்ட சேதி
அறிந்த பின் முதன் முதலாய்
நான் பகிர்ந்து கொண்ட
என் நெகிழ்வுகளை,
அதன் ஈரத்தில் புளகாங்கிதம்
அடைந்து சிலிர்த்துப், பின்
என் தொடுதலினால்
ரோமத்தின் உராய்வின்
உண்டான வெப்பத்தில்
எழுந்து நின்று சு(ப)ய உலர்வு செய்யும்
உன் கையில் உள்ள
மயிர்க்காம்பைக் கேட்டுப் பார்!!!
அது சொல்லும் என் பரவசத்தை!!!

இதிலிருந்து தானோ இறக்குமதி
ஆனது 'தான் ஆடாவிட்டாலும்
தன் சதை ஆடும்'
என்பது நமக்குள்?

 
posted by Raghavan alias Saravanan M at 5/27/2006 12:06:00 PM, | 0 பின்னூட்டங்கள்

காதலித்துப் பார் - 2

இறக்காமலே திதி கொடுப்பாய் அவளைப் பார்ப்பதற்கு
முன் வாழ்ந்த பாவப்பட்ட ஆன்மாவிற்கு!!!

பார்த்தால் பாக்கியம் என்பாய்!
பார்க்காவிடில் பைத்தியம் என்பாய்!

Labels:

 
posted by Raghavan alias Saravanan M at 5/27/2006 11:49:00 AM, | 0 பின்னூட்டங்கள்

காதலின் குலத்தொழில்

கத்திக்கண் பார்வையில் கொத்திக்
குத்தகைக்கு எடுத்துக் கொள்வது
காதலின் குலத்தொழிலோ?

காயப்பட்டும் கண்ணீரன்றிக்
காதல் மட்டுமே வருகிறதே!!

Labels:

 
posted by Raghavan alias Saravanan M at 5/27/2006 11:43:00 AM, | 1 பின்னூட்டங்கள்

காதலித்துப் பார்! - 1


செதில் செதிலாய்ச் செல்லரிக்கும் இதயம்!
பிறகு வரும் காதல் வானில் புது உதயம்!

கவனித்தல் என்ற ஒன்றை மிகமிகக் கவனமாய் நடைமுறைப் படுத்துவாய்!
மனங்கவர்ந்தவளின் புருவ நெறிப்பையும் உள்வாங்குவாய் உன்னிப்பாய்!!

Labels:

 
posted by Raghavan alias Saravanan M at 5/27/2006 10:59:00 AM, | 0 பின்னூட்டங்கள்
Thursday, May 25, 2006

பழையதில் புதிதாய்.....

உன்னோடு நடக்கும் போது
மட்டுமே என் வீட்டினுள்ளே
நான் புதிதாய் நடக்கிறேன்...



 
posted by Raghavan alias Saravanan M at 5/25/2006 08:52:00 PM, | 0 பின்னூட்டங்கள்

கவிதை எனப்படுவது யாதெனின்....

பார்க்கும் பொருட்கள்
அனைத்தையும் பாடுபொருளாக
ஏற்றிப், படிப்பவர்
நெஞ்சினில் ஒரு பாதிப்பை
ஊற்றி, விளைவாக
மற்றுமொரு படைப்பை
உருவாக்கும் ஊக்கியாயிருப்பது!

Labels:

 
posted by Raghavan alias Saravanan M at 5/25/2006 12:40:00 AM, | 0 பின்னூட்டங்கள்
Monday, May 22, 2006

நாட்கள் இருவகை


என்னைப் பொறுத்த வரை எனக்கு
வாரத்தில் இரண்டே இரண்டு நாட்கள்!!

ஒன்று,
உன்னைப் பார்க்கின்ற
பாக்கியம் செய்த நாட்கள்!!!

இன்னொன்று,
உன்னைப் பார்க்காத
பாவம் செய்த நாட்கள்!!!

Labels:

 
posted by Raghavan alias Saravanan M at 5/22/2006 08:40:00 PM, | 2 பின்னூட்டங்கள்
Sunday, May 21, 2006

ச்ச்ச்சிறிய கவிதை!!

எழுதுகிற கவிதைகளெல்லாம்
எழுத்தளவில் பெரியதாகவே
இருக்க எனக்குள் புகுந்தது
ஓர் ஆச்சரியம்!!

மிகச்சிறந்த சிறிய கவிதை
எதுவாகவிருக்கும் என்று!!

நம் இருவரின் விழிகளும்
காதலோடு ஒரு ஒற்றைப்
புள்ளியில் சந்திக்குமே,
அதை விடச் சிறிய கவிதையை
யாராலும் தரவியலாது தங்கமே!!!

நீதான் கவிதைக்குக் கரு!
எனக்குக் குரு!

Labels:

 
posted by Raghavan alias Saravanan M at 5/21/2006 03:09:00 PM, | 4 பின்னூட்டங்கள்
Friday, May 19, 2006

என்னை மட்டும் விட்டுவிட்டு!

பூ அசைவதையும்,
தென்றல் வீசுவதையும்,
நதி ஓடுவதையும்,
அணில் அழகு காட்டுவதையும்,
பட்டாம்பூச்சியின் எழிலையும்
படபடவென்று பட்டியலிடுகிறாய்
உனக்குப் பிடித்தவை என்று!

உன்னை மட்டுமே மிகப்பிடித்த
என்னை மட்டும் விட்டுவிட்டு!!!

Labels:

 
posted by Raghavan alias Saravanan M at 5/19/2006 03:06:00 AM, | 0 பின்னூட்டங்கள்
Thursday, May 18, 2006

முரண் #1 - பிறந்த நாள்....


பிறந்த நாளன்று சோகப்பாட்டு
பின்னணிப் பாடகனின் நிகழ்ச்சிநிரல்...!
 
posted by Raghavan alias Saravanan M at 5/18/2006 11:14:00 PM, | 0 பின்னூட்டங்கள்
Wednesday, May 17, 2006

வித்தியாசத்திற்கு முற்றுப்புள்ளி!

இப்பொழுதெல்லாம்
மக்கள் வித்தியாசமான
அணுகுமுறைகளைத் தான்
விரும்பி ஏற்கிறார்களாம்!

சரி! சரி! நீ என்னைக்
காதலித்து விடு!
வித்தியாசங்களுக்கெல்லாம்
ஒரு முற்றுப்புள்ளியாக இருக்கட்டும்!

Labels:

 
posted by Raghavan alias Saravanan M at 5/17/2006 11:02:00 PM, | 6 பின்னூட்டங்கள்

விடுமுறை நாளில்...

விடுமுறை நாளில்
நீ ஊருக்குச் செல்கையில்
உனக்கோ
உன் உடைமைகள் மட்டுமே
இடம்பெயர்ந்தன!
எனக்கோ என்
உலகமே தடம்புரண்டது!

எனக்கான உன் நினைவுகளை
யார் வந்து ஊட்டுவது?
தாலாட்டுப் பாட்டுக்காகத்
தாயை மாற்றுவதா?

Labels:

 
posted by Raghavan alias Saravanan M at 5/17/2006 12:54:00 AM, | 8 பின்னூட்டங்கள்
Tuesday, May 16, 2006

மனதில் உறுதி வேண்டும்!

மனதில் உறுதி வேண்டும்!
-------------------------------

ஏ! மனிதா!
ஜெயத்தைப் பற்றிய பயம்!
இதனால் தவிப்பது
உன் இதயம்!
சற்றேனும் சிந்தி!
உருவாகும் உதயம்!

தேவையற்ற கவலைகளுக்குத்
தீவைத்து உடனே
தீபாவளி கொண்டாடு!
தீயவை தீய்ந்து
தித்திப்பாகும் உன் வாழ்வு!

கறைபடிந்த கைகளைக்
கழுவுகின்ற வேளையில்
ரேகைகள் தேய்ந்துவிடுமே
என்று தேய்ந்ததுண்டா?

சத்தமாகப் பேசினால்
சப்தஸ்வரங்களும் உனக்குள்
அஸ்தமனமாகி விடுமே
என்று பயந்ததுண்டா?

பிறகென்ன பிதற்றல்!?
சில காலம் பொறு!
உறுதியுடன் இரு!
தேய்பிறையும் வளர்பிறையாகும்!
தேம்பல்களும் தெள்ளமுதாகும்!

உன்னுடைய
நுட்பத்திற்கு நூறுகளும்,
ஆர்வத்திற்கு ஆயிரங்களும்,
லட்சியத்திற்கு லட்சங்களும்,
கொள்கைகளுக்குக் கோடிகளும்
குறுக்கிடுமோ எனக்
குமைந்திடாதே!

உன்னுடைய
தீட்சண்யத்தைத் தீட்டு!
தயவு தாட்சண்யத்தைத்
தடிகொண்டு ஓட்டு!
புகழ்ச்சி கண்டு மயங்கும்
பேதை மனத்தைப்
புத்தியால் பூட்டு!
உன்னைத் தவிக்கவிட்டுத்
தன்னிறைவு கொள்ளும்
வீணர்களுக்கு வை வேட்டு!

உளமாரக் கொண்ட
உறுதியில் உறுதியாய் இரு!
உலகப் போரையே உருவாக்காலாம்
ஓரிரு நொடிகளில்!!

எடுத்துக் கொள்ளும்
முயற்சிகளில் முனைப்பாய் இரு!
மும்மொழி அகராதியில்
'முயற்சி'யின் இடத்தில்
முத்தாய்ப்பாய் உன் பெயர்
பொறிக்கப்பட்டிருக்கும்!

- நம்பிக்கையுடன்
இராகவன் என்ற சரவணன் மு.
 
posted by Raghavan alias Saravanan M at 5/16/2006 09:04:00 PM, | 0 பின்னூட்டங்கள்

தனிமையும் உன் அருகாமையும்...

உன் அருகாமை தேவைப்படுகிறது!
நான் தனிமைப்படுவதாய் உணரும் போதெல்லாம்!
தனிமை தேவைப்படுகிறது!
உன் அருகாமை தேவைப்படுவதாய் உணரும் போதெல்லாம்!

[நண்பர்களே, இது ஆங்கிலத்தில் Deadlock என்ற சொல்லிற்குப் பொருத்தமான கவிதை.. சரியா? குழப்பமாயிருந்தால் மறுபடியும் ஒருமுறை வாசித்துப் பாருங்கள்!]

Labels:

 
posted by Raghavan alias Saravanan M at 5/16/2006 07:49:00 AM, | 2 பின்னூட்டங்கள்
Monday, May 15, 2006

காதல்!! போர்??

நான் என்னைப் பற்றிப்
பெரும்பாலும் நினைப்பதேயில்லை!
எனில் நான் பொதுநலவாதியா?

நான் உன்னைப் பற்றியே
நினைத்து என்னை நனைக்கிறேன்!
எனில் நான் சுயநலவாதியா?

சுயநலத்திற்கும், பொதுநலத்திற்கும்
இடையே நடக்கும் புனிதப்போரா
காதல்???

Labels:

 
posted by Raghavan alias Saravanan M at 5/15/2006 12:10:00 AM, | 0 பின்னூட்டங்கள்
Sunday, May 14, 2006

நடமாடும் தெய்வம்!!!

ஆறறிவு ஜீவராசிகள்
அனைத்திற்கும்
ஆதி என்பதே
அன்னை உன்னால் தானே
ஆரம்பிக்கிறது!

எந்நிலையிலும்
எப்பொழுதும்
எதையுமே
எதிர்பார்க்காத
எளிமையான பொக்கிஷம்!


மண்ணில் விதைத்த நாள்முதல்
புதைக்கும் நாள்வரை
வினைகளே செய்தாலும்
விளையாட்டாகவே எடுத்துக்கொள்ளும்
விஸ்தாரமான மனது
உனக்குள் மட்டும் தானே
உள்ளூர ஊறியிருக்கிறது!

உலகில் உதித்த
கணம் தொட்டுப்
பாசம் என்னும் செடிக்குப்
பாங்காக நீர்வார்த்தவளும் நீதான்!

அம்மா என்னும்
சொல்லைக் கேட்ட
அந்தக் கணம்
பாசம் பொங்காத இதயங்கள்
பாவம் செய்த இதயங்கள்!


இந்த உலகில்
எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும்
எத்தனை செயல் செய்தாலும்
கடுகளவும் கைம்மாறு
செய்யப்பட முடியாத
மாபெரும் பெருமை
உனது
தாய்மைக்கு மட்டும் தான்!

எத்தனை நிகழ்வுகள்
இன்பமாய் இருந்தாலும்
உந்தன் புடவைத்தலைப்பால்
புதல்வன் என்னைப்
பொத்தி எடுப்பாயே

அந்த ஒரு செயலை விடவா
அகிலத்தில் வேறொரு
ஆனந்தமான நிகழ்வு
இருக்கக் கூடும்?

உலகில் உள்ள
எல்லா உயிர்க்கும்
எந்த மொழிகளையும் விடச்சிறப்பு,
உன் வழியாக வரும்
தாய்மொழி ஒன்றுக்கு
மட்டுமே உண்டு!

இந்த உலகில்
உன் ஒருத்திக்கு மட்டும் தான்
எதைக் கொண்டும்,
எப்பாடு பட்டாலும்,
எந்த சக்தி மூலமும்
ஈடுகட்ட முடியாது!
எனில். அது அந்தச் சூரியனைச்
சுலபமாய்ச் சுண்டுவிரலில்
சுழற்றி விடுவதற்குச் சமம்!
 
posted by Raghavan alias Saravanan M at 5/14/2006 11:39:00 PM, | 0 பின்னூட்டங்கள்

எ(மு)ன் குறிப்பு....

அன்பான கவிதை நே([சு]வா)சிக்கும் நெஞ்சங்களுக்கு,

என் உள்ளத்துள் ஊறிய உணர்வுகளின் எழுத்து வடிவமே இங்கே வலைப்பூக்களாய்த் தூவப்பட்டிருக்கின்றன....

நிச்சயம் இந்தப் பூமரங்கள் உங்கள் இனிமையான இதயத்துள் சாமரங்கள் வீசும் என்ற பலமான, நலமான நம்பிக்கையில் தொடுத்திருக்கிறேன்...

முத்தம் வழங்கிய தாய் தன் குழந்தையிடம் எதையுமே எதிர்பார்ப்பதில்லை. ஆயினும் உடனடியாக, வாங்கிய முத்தத்திற்குப் பரிசாக தன்னால் முடிந்த அளவு முத்தமழை பொழியும் மழலையைக் காண்கையில் தாய் எவ்வளவு உவகையடைவாளோ அந்த அளவுக்கு உங்கள் மேலான விமரிசனங்கள் என்னை உற்சாகப்படுத்தும்! ஊக்கப்படுத்தும்!!!

பள்ளி செல்லும் வயதிலேயே கவிதைகள் எழுத ஆரம்பித்தேன்.. சில ஆண்டுகள் இடைவெளி விட்டுக் கல்லூரிப் பருவத்தில் இன்னும் சற்றே மேம்பட்ட வடிவில் எழுதினேன்... இதுகாறும் என்னை ஊக்கப்படுத்திய, ஊக்கப்படுத்திக் கொண்டிருக்கிற அத்துணை அன்பு நெஞ்சங்களுக்கும் என் ஆத்மார்த்தமான நன்றிகளை அர்ப்பணிக்கிறேன்....

வாழ்த்துங்கள்... வளர்கிறேன்...!!!

தோழமையுடன்.....
 
posted by Raghavan alias Saravanan M at 5/14/2006 10:55:00 PM, | 7 பின்னூட்டங்கள்