Wednesday, November 13, 2013

மெளனங்களின் மொழிபெயர்ப்பு

"வாயைத் தொறந்தா
மூடறதே இல்லை!",

"எப்படித்தான் முடியுதோ
இப்படி ஓயாமப் பேச",

"வாய்ப்பே இல்லை!
இதெல்லாம் ஒரு வரம்",

"எந்நேரமும் தொண
தொணன்னு இருந்தா எப்படி?"

"மனுசனை கொஞ்சநேரம்
நிம்மதியா விடுறயா?"


சுற்றியுள்ள பெருமக்களின்
கேலி தொணிக்கும் கலவைப்பேச்சுக்கள்.
சில நேரங்களில் சண்டை,
பல நேரங்களில் கருத்துமோதல்!
அவ்வப்பொழுது வருத்தம்,
ஓரிரு தருணங்களில் சஞ்சலம்
இவ்வாறாகக் கழிந்திருக்கின்றன
எனதான ஓயாத உரையாடல்கள்!

யாரென்ன சொன்னாலும்
நான் என்னை மாற்றிக்
கொண்டதில்லை!

தவறே செய்யாமல்
தண்டனை எதற்கு ?  - என் வாதம்!

"உண்மையான நட்பு என்பது
புரிதலில் இருக்கிறது" என்பது
கேள்விக்குறியான பொழுதுகளில்
"அமைதியாய் இருப்பது மட்டும்
என்ன பெரிய அழகா?" என்று
சொல்லாமல் கொள்ளாமல்
ஒரு உருத்தெரியா வன்மம்
ஓசைப்படாமல் வளர்ந்திருக்கிறது!

மொத்தக் கேலிக் கணைகளுக்கும்
தடுப்புச்சுவர் எழுப்ப
எங்கிருந்து முளைத்தனையோ நீ?

"வெளியே கொட்டித் தீர்க்கும்
கோபங்கள் உடனடியாய் உலரும்!
உள்ளே பொத்திவைக்கும் உக்கிரங்கள் 
தேவையான பொழுதெல்லாம் மலரும்!
தன் வசதிக்கேற்ப வளரும்!"

இந்த ஐந்துவரி சித்தாந்தத்தை
நடைமுறைப் படுத்தும் விதமாய்
ஏனென்று தெரியாமல் என்னுள்ளே
பிரசவிக்கின்ற மெளனத்தை
மிக அழகாய் கருணைக்கொலை செய்கிறாய்!
ஏனென்ற கேள்விக்கு
எளிமையாய் ஒரு பதில்!

"காரணம் தெரிந்து வருகிற மெளனம்
களிக்கப்பட வேண்டியது!
காரணம் தெரியாமல் வருகிற மெளனம்
கவனிக்கப்பட வேண்டியது!" என்று.

எல்லோரும் என் வார்த்தைகளை
மொழிபெயர்க்கையில், நீ மட்டுமே
என் மெளனத்தை மொழிபெயர்க்கிறாய்!
இப்பொழுது தெளிவாகப் புரிகிறது

"மெளனங்கள் புரியப்படும் வரை
நட்பு மழலைப்பருவத்தில்
மட்டுமே இருக்கிறது!"

குறிப்பு: இந்தக் கவிதை என் மின்னஞ்சல் பெட்டியில் 6 வருடங்களுக்கு முன்பே சேமிக்கப்பட்டிருந்தது. ஏதேச்சையாக இன்று தான் காண நேர்ந்தது. இனியும் தாமதித்தல் முறையல்ல என்று பதிவிட்டு விட்டேன்!

Labels: ,

 
posted by Raghavan alias Saravanan M at 11/13/2013 07:56:00 PM, |

4 பின்னூட்டங்கள்:

எளிமையான தமிழாயினும் எளிதாக இதயத்தை அடையும் பதிவாக இருந்தது. மௌனம் என்னும் மொழிக்கு தனி மதிப்பு உண்டு என்பது உண்மையே!
நன்றி கீர்த்தனா..தமிழில் தட்டச்சியதற்கு என் பாராட்டுக்கள் :)
  At Friday, November 15, 2013 4:24:00 AM Anonymous Ponnarasi நவின்றது:
:-) very well written
@Ponnarasi,

நன்றி வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்.