Sunday, June 18, 2017

மனதாளும் மகள்

மனதாளும் மகள்
=================

தந்தையைத் திருத்தித்
தன்னை வளர்த்துக் கொள்பவள் மகள்.

*

மனையாளுடனான உறவில்
அவ்வப்போது தீர்கிறது
ஆண்மையின் தாகம்.
மகளுடனான உறவில்
எப்பொழுதுமே தீர்வதில்லை
ஆன்மாவின் தாகம்!

*

உடலாளும் மனைவியிடம் கூட
எப்பொழுதாவது பொய்
சொல்ல முடிகிற அப்பாக்களால்
மனதாளும் மகளிடம்
எப்பொழுதுமே முடிவதில்லை
ஒரு சிறு பொய் உதிர்க்க.

*
தாய்க்குப் பின் தாரம்  -
தணிக்கைக் குழுவுக்கு உட்பட்டது!
தாய்க்குப் பின் மகள் -
நிபந்தனைகளுக்காட்படாத நியதி!
*


மகள் மனமுடையக்
கூடாதெனும் கொள்கையினூடாக,
செய்து கொண்டிருக்கும்
மகத்தான செயலெதுவாயினும்
மறுகணம் மலர்வாளெனில்
திடீர்த் தோல்வியினைத்
தோளேந்துபவன் தகப்பன்!
*

எழுதும் கவிதையின்
கருப்பொருள் மகளேயாயினும்
ஈன்ற தாய், ஏந்திய தமக்கை,
வழியிலிணைந்த மனைவி - என
எல்லோருமாய் எழிலுறுமாற்றல்
எளிதில் வரப்பெறும் வரமுறுகிறாள்!

*
என்னைக் கண்டதும்
உவகையுறக் காத்திருப்பவள் மனைவி!
என்னை உவகையுறச்
செய்வதற்காகவே காத்திருப்பவள் மகள்!
*
தத்தித் தவழ்ந்தபடி
தன் தளிர்க் கரங்களால்
தந்தருளிய தம்ளரிலிருந்த
சிற்சிறு துளிகள் இயம்பின
சிறு துளி பெரு வெள்ளமென.
தண்ணீர் மட்டுமல்ல என்
தாமரைப்பூ முகத்தாளின் பாசமும்!
*
தன் மகளின் வாழ்வில்
தானொரு தவிர்க்கவொண்ணா
முன்னுதாரணமென
முழுதாயுணரும் தருணந்தன்னில்
தானாய்ச் செப்பனிடப்படுபவன் தந்தை!
*
​தன் வளர்ப்பின் வனப்பில்
மகளின் வாழ்க்கை வளமுற
வேண்டுமெனும் ​வேட்கையில்
வெட்கித் தலைகுனியும்
எந்தச் சூழலையும்
வெட்டி எறிகிறான் தந்தை!
*
எவ்விதக் குற்றப்பட்டியலுமின்றி,
என்னைத் திருப்பதிப்படுத்தும்
ஏகாதிபத்திய நோக்கில்
என் வருகைக்காகக் காத்திருக்கும்
ஏந்திழை என் மகள்!
வீடுதிரும்பிய என்னை
விழிகளிலேந்திய மறுகணம்
மகளுதிர்த்த பூம்புன்னகையில்
​​​​

​நாள் முழுதும் ஓடித்திரிந்த
என் களைப்புக்கள் சாபல்யமுறுகின்றன.

*

பெண்மகவைப் பெற்றெடுத்த தந்தைமார்க்குப்
பெருமிதத்தோடு சமர்ப்பணம்.

#ManadhaaluMagal


மு. இராகவன் என்ற சரவணன்
17 சூன் 2017 சனிக்கிழமை காலை 08 50 மணி இந்திய நேரப்படி

Labels:

 
posted by Raghavan alias Saravanan M at 6/18/2017 03:29:00 PM, | 1 பின்னூட்டங்கள்