Monday, December 31, 2007

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2008

அதிகாலைத் துயிலெழுதல்,
அனைவரிடமும் அன்பாயிருத்தல்,
சரிவிகிதத்தில் உணவருந்துதல்,
சிக்கனமாய்ச் செலவழித்தல்,
காலவிரயத்தைக் கட்டுப்படுத்துதல்,

இப்படியான வழக்கமான
உறுதிமொழிகளை வருடத்துக்கு
ஒருமுறை புதுப்பிக்க உதவிபுரிகிறாய்
என் செல்லப் புத்தாண்டே!

வெகுசிலரே கனவுகளுக்கு
உயிர் தருகின்றோம் முயற்சிகளால்..
ஏனையோர் வழக்கம்போல
கனவுகாண மட்டும் முயல்கின்றோம்.

கனவுகாண முயற்சி செய்யலாம்!
முயற்சி செய்வதாய்க்
கனவு காணக்கூடாது!

கனவுகளுக்கு உயிர்கொடுக்க
முயலாதவர் உண்மையில்
கனவு காண இயலாதவர்!

முயற்சிகளின் நீட்சி
கனவுகளின் மாட்சி!

உழைப்பின் ஆட்சி
முன்னேற்றத்தின் சாட்சி!

கொண்ட கனவுகள் பலிக்கவும்,
முயற்சிகள் மெருகேறவும்
முழுமனத்தோடு வாழ்த்தி
இனிதே ஆரம்பிப்பாய் உன் பயணத்தை!

அனைவருக்கும் என் இதயங்கனிந்த
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

Labels:

 
posted by Raghavan alias Saravanan M at 12/31/2007 06:17:00 PM, | 12 பின்னூட்டங்கள்
Monday, December 24, 2007

தூக்கம் விழித்தல்

ஓரினிய நள்ளிரவில்
திடீரென்று தூக்கம் விழித்துப்,
பின் எனது அருகாமையை
அனுபவித்தவளாய், சுகமாய்
என் தோள் சாய்ந்து தொடர்ந்தாய்
என் மீதான முழு நம்பிக்கையை
உன் ஒற்றை முறுவலில் சாட்சியாக்கி!

நீ தூங்கும் வேளைகளில்
இதற்காகவாவது நான்
விழித்திருக்க வேண்டுமடி!

*

Labels: ,

 
posted by Raghavan alias Saravanan M at 12/24/2007 11:50:00 PM, | 5 பின்னூட்டங்கள்

கனாக் காணும் காலங்கள் - 4

கதையின் முந்தைய பகுதியைப் படிக்க, இங்கே சொடுக்கவும்.

நம் வாழ்வில் நடக்கின்ற ஒவ்வொரு நிகழ்விலும் ஏதோ ஒரு விளைவு இருக்கத்தான் செய்கின்றது. நாம் எதிர்பார்த்த விதமாகவோ அல்லது முற்றிலும் எதிர்பாராத விதத்திலோ விளைவுகள் நம்மைச் சுற்றிச் சுழன்று கொண்டே தான் இருக்கின்றன. நாம் எந்தளவு நம்மைத் தயார்ப்படுத்தி வைத்திருக்கிறோமோ அதற்கேற்ப நமது தன்மை மாறுபடுகிறது. இதனைப் புரிந்து கொண்டவர்கள் புன்னகையோடும் புரியாதவர்கள் புதிர்களோடும் நமதான செயல்களுக்கு விடைதேடி நடைபோடுகிறோம்.

பாதிக் கிணற்றைப் பக்குவமாய்த் தாண்டிய இன்பராஜன், நுழைவுத் தேர்வு முடிவுகளாகக் காத்திருந்த வேளையில் முடிவுகள் வரும் நாளன்று ஆவலுடன் எதிர்பார்த்திருந்தான். எப்பொழுதும் ராசி பலனில் அவ்வளவு ஆர்வம் காட்டாதவன் அன்று எதேச்சையாகத் தினசரி நாட்காட்டியில் அவனுடைய ராசிபலன் பார்த்தான். பார்த்த மறுகணம் சஞ்சலமடைந்தவனாய் நாட்காட்டியின் மையத்தில் வீற்றிருந்த ஆறுமுகத்தானை நோக்கினான். அண்ணன் முதல் அத்தியாயத்தில் ஒற்றைப் புன்னகை சிந்தினார் என்றால் தம்பி இங்கு ஆறுமுகத்திலும் அட்டகாசமாகப் புன்னகைக்கிறார்.

அன்றைய தினம் அவனுக்குச் சற்றே ஏமாற்றத்தை அளிக்கக்கூடிய விதமாய் நுழைவுத் தேர்வினில் எதிர்பார்த்த மதிப்பெண்கள் வரவில்லை! நல்ல மதிப்பெண்களே எடுத்திருந்தாலும் அவனுடைய கனவின் நீட்சிக்குக் கை கொடுக்கவில்லையே! மருத்துவப் படிப்புக்குத் தேவையான அளவுக்குப் போஷாக்கு இல்லை.

ஓரளவுக்கு உண்மை புரிந்தாலும் சற்றே துவண்டது அந்தச் சிறுவனின் உள்ளம்! ஏனெனில் அது அவனுடைய பல வருஷக் கனவு! அதற்கான ஒரு முழு வருடத் தவம்! தன் மெய் வருந்திய அளவுக்குக் கூலி கிட்டவில்லையே என வள்ளுவனைக் கூடச் சபிக்கும் அளவுக்குச் சலிப்பின் உச்சம் தொடும் தருணம். திருவிழாவின் போது ஒன்று கூடும் ஊர்மக்களைப் போல அவன் எண்ணங்களின் ஊர்வலத்தில் தேர்வலம் வந்தன தேம்பல்களும், விசும்பல்களும் கண்ணீர் எனும் சக்கரத்தில்! சக்கரம் இதுவே தக்க சமயம் என்று உருண்டோடியது கன்னப்பரப்பில்.

விரக்தியின் எல்லைக்கு யாருடைய துணையும் இல்லாமலே சென்றிருந்த இன்பராஜனைத் தன் நிலைப்படுத்தியது அப்பா சுந்தரராஜனின் ஆறுதலான வார்த்தைகள். "தம்பி. இதெல்லாம் சகஜம்ப்பா.. நீ நல்லாத் தானே படிச்சே. நல்லாத் தான் பரீட்சை எல்லாம் எழுதியிருக்கே. எங்கோ சில தப்பிதம் இருந்து போச்சு! வருத்தப் பட வேண்டிய விஷயம் தான்! இல்லைங்கலே. ஆனா இத்தோட எல்லாமே முடிஞ்சிருச்சா? MBBS மட்டும் தான் படிப்பா என்ன? அடுத்து ஆக வேண்டியதைப் பார்ப்போம் ராஜா. போர் நடக்கலைங்கிறதுக்காக போருக்கு எல்லாவிதத்திலும் தயாராய் வந்துள்ள சிப்பாய்களைக் குறை சொல்வது முறையாகுமா?" என்று ஆறுதலாய் அவன் மனம் கோணாத படி பேசினார்.

அதுவரை ஆடிக்கொண்டிருந்த ஊஞ்சல் திடீரென்று தன் இயக்கத்தை நிறுத்தியது போலிருந்தது அவனுக்கு. இருப்பினும் அப்பா, அம்மா, தங்கை இவர்களும் நம்மால் கஷ்டப்படுகிறார்களே என்ற சிந்தனையில் சற்றே ஆறப்போட்டான் இந்தச் சிந்தனையை. பெரும்பாலும் அப்பாவின் வார்த்தைக்கு அவ்வளவு மதிப்பு என்பதால் அம்மா, தங்கையின் பங்கு அவ்வளவாய்த் தேவைப்படவில்லை! இருப்பினும் அம்மாவும், ஜனனியும் தத்தம் பங்குக்கு இன்பராஜனை இன்ப ராஜனாக்க முயன்றார்கள்.

"எந்தப் பிரச்சினையாக
இருந்தாலும் ஒரே ஒரு
இரவு வரை தள்ளிப் போடு!
இரவு அனுஷ்டித்த கருமையை
மறுநாளின் புத்தொளி புறந்தள்ளும்"

- எங்கோ படித்த வரிகள் நினைவுக்கு வர அப்படியே தூங்கிப் போனான்! நிச்சயமாக இரவுத் தூக்கத்தில் பிந்தைய நாளின் தாக்கம் சற்றே தளர்ந்து தான் போயிருந்தது! தற்காலிகமாய்த் தள்ளிவைக்கப்பட்டன அவனது சோகமேகங்கள்.

வசந்தமோ வருத்தமோ வரும்வரைக்கும் தான் பரபரப்பு இருக்கும். ஒரு விறுவிறுப்பும் இருக்கும். வந்த பின் வாடிக்கையாகி விடும்! அதே போல இன்பராஜனும் ஓரிரு நாட்களில் தன் இயல்பு நிலைக்குத் திரும்பினான். இனி நடக்க வேண்டியதைப் பற்றி யோசித்தலே நலம் பயக்கும் என்றெண்ணி அடுத்த கட்ட நடவடிக்கைகளில் இறங்கினான். நடக்கின்ற எல்லாச் செயல்களுமே ஒரு காரணத்தோடு தான் நடக்கின்றன என்ற பொருள் புரியும் வயதிருந்தாலும் சிற்சில இடங்களில் தேர்வு சம்பந்தப்பட்ட விஷயங்கள் நினைவுகளில் நிழலாடும் பொழுதுகளில் திடீரென ஒரு மின்னல் தாக்கத் தான் செய்தது.

"When everything happens on the way you expected, then probably you are on a wrong lane" - சரியான வாசகம் தான்! பழமொழிகளைப் பற்றிய ஒரு பழமொழியும் அவன் அறிந்ததே. "A proverb is a short sentence born out of a long experience" என்று. சரியெனச் சிரித்துக் கொண்டே அடுத்த கட்டமாய் என்ன செய்ய வேண்டுமென்று ஆலோசித்தான். உடனடியாய் உதித்தது ஒரு யோசனை. தொழிற்கல்வி படிக்கலாம் என்பது அவன் நண்பர்கள் சிலர் அவனுக்குச் சொன்ன யோசனை. Diploma படிப்பு என்பது பொதுவாக ஒரு நல்ல படிப்பாகக் கருதப்படுவதில்லை எனினும், அதில் நிறைய செய்முறை விளக்கங்கள் அதிகம் என்பதும் அவன் அறிந்ததே.

நடப்பது நடக்கட்டும் என்று அருகிலிருந்த இரண்டு, மூன்று தொழிற்கல்வி நிலையங்களில் விண்ணப்பப் படிவம் வாங்கிப் பூர்த்தி செய்தான். அவனுடைய மெய் வருத்தலுக்கு மெய்யான கூலி கிடைத்தது. விண்ணப்பித்த அனைத்துக் கல்லூரிகளிலும் அவனே முதலில் தேர்வு செய்யப்பட்டிருந்தான். அவன் கேட்டிருந்த அனைத்துத் துறைகளிலும் அவனுக்கு இடம் தர முடிவு செய்திருந்தன கல்லூரிகள். எந்தக் கல்லூரியை, எந்தத் தேர்வு செய்வது என்று முடிவு செய்வது அவன் கையில் இருந்தது. "படிக்கப் போறது நீ தான்ப்பா.. எங்க இருந்தாலும் நீ நல்லாப் படிப்பேன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு!" என்று அவன் விருப்பத்திற்கே விட்டு விட்டார் அப்பா. வைரத்திற்கு மின்னுதல் ஒன்றே குலத்தொழில் என்பது அவரின் அசையாத நம்பிக்கை. இதுவரை அவரின் நம்பிக்கை எதுவும் வீண் போனதில்லை.

இன்பராஜனும் அவனுக்கு விருப்பப்பட்ட துறையை, உள்ளூரிலேயே உள்ள கல்லூரியைத் தேர்ந்தெடுத்தான். வீட்டிலிருந்தே கல்லூரிக்குச் சென்றால் வீட்டுக்கும் கூட மாட ஒத்தாசையாய் இருக்குமே என்று.

வெளியூரில் தங்கிப் படிக்கலாம் என்று முளைவிட்டிருந்த அவனுள்ளே முளைவிட்டிருந்த ஆசைகள்...? "ஆசையே அலை போலே.... நாமெல்லாம் அதன் மேலே...."

(தொடரும்..)

Labels: ,

 
posted by Raghavan alias Saravanan M at 12/24/2007 11:31:00 PM, | 14 பின்னூட்டங்கள்