Tuesday, May 16, 2006

மனதில் உறுதி வேண்டும்!

மனதில் உறுதி வேண்டும்!
-------------------------------

ஏ! மனிதா!
ஜெயத்தைப் பற்றிய பயம்!
இதனால் தவிப்பது
உன் இதயம்!
சற்றேனும் சிந்தி!
உருவாகும் உதயம்!

தேவையற்ற கவலைகளுக்குத்
தீவைத்து உடனே
தீபாவளி கொண்டாடு!
தீயவை தீய்ந்து
தித்திப்பாகும் உன் வாழ்வு!

கறைபடிந்த கைகளைக்
கழுவுகின்ற வேளையில்
ரேகைகள் தேய்ந்துவிடுமே
என்று தேய்ந்ததுண்டா?

சத்தமாகப் பேசினால்
சப்தஸ்வரங்களும் உனக்குள்
அஸ்தமனமாகி விடுமே
என்று பயந்ததுண்டா?

பிறகென்ன பிதற்றல்!?
சில காலம் பொறு!
உறுதியுடன் இரு!
தேய்பிறையும் வளர்பிறையாகும்!
தேம்பல்களும் தெள்ளமுதாகும்!

உன்னுடைய
நுட்பத்திற்கு நூறுகளும்,
ஆர்வத்திற்கு ஆயிரங்களும்,
லட்சியத்திற்கு லட்சங்களும்,
கொள்கைகளுக்குக் கோடிகளும்
குறுக்கிடுமோ எனக்
குமைந்திடாதே!

உன்னுடைய
தீட்சண்யத்தைத் தீட்டு!
தயவு தாட்சண்யத்தைத்
தடிகொண்டு ஓட்டு!
புகழ்ச்சி கண்டு மயங்கும்
பேதை மனத்தைப்
புத்தியால் பூட்டு!
உன்னைத் தவிக்கவிட்டுத்
தன்னிறைவு கொள்ளும்
வீணர்களுக்கு வை வேட்டு!

உளமாரக் கொண்ட
உறுதியில் உறுதியாய் இரு!
உலகப் போரையே உருவாக்காலாம்
ஓரிரு நொடிகளில்!!

எடுத்துக் கொள்ளும்
முயற்சிகளில் முனைப்பாய் இரு!
மும்மொழி அகராதியில்
'முயற்சி'யின் இடத்தில்
முத்தாய்ப்பாய் உன் பெயர்
பொறிக்கப்பட்டிருக்கும்!

- நம்பிக்கையுடன்
இராகவன் என்ற சரவணன் மு.
 
posted by Raghavan alias Saravanan M at 5/16/2006 09:04:00 PM, |

0 பின்னூட்டங்கள்: