Monday, April 21, 2008

கனாக் காணும் காலங்கள் - 6

இம்முறையும் தாமதத்திற்கு வருந்துகிறேன்.

கதையின் முந்தைய பகுதியைப் படிக்க, இங்கே சொடுக்கவும்.

இன்பராஜனுக்குத் திடீரென்று தலைக்கு மேலே வானம் வட்டமடிப்பது போலிருந்தது. ஏற்கெனவே ராகிங்கைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தாலும், அதன் அளவுகோலைப் பற்றி அறிந்திராததால் அதிர்ச்சிக்குள்ளானதன் விளைவே அது.

நண்பர்கள் புடைசூழ இருந்தாலும் இங்கே அது உதவவில்லையே என்ற நிலையும் மேலும் கவலைக்குள்ளாக்கியது. இருப்பினும் பெரிதாக ஒன்றும் நடந்து விடாது என்று சற்றே திடமாக நம்பினான். மேலும், வந்த சில நாட்களிலேயே எதற்கு வீண் வம்பு என்றும் சற்றே விசனப்பட்டவனாக பேருந்து நிலையத்தில் நின்றிருந்த நபர்களை நோக்கி நடந்தான்.

முதலாவதாக வெளிர் நீல நிறத்தில் முழுக்கைச் சட்டை அணிந்து, தனக்கு முதுகு காட்டிக் கொண்டிருந்த நபரிடமிருந்து துவக்கினான வணக்க வாத்தியத்தை. அவரருகில் சென்று திரும்பிப் பார்த்தவுடனே அவனுக்குச் சற்றே நம்பிக்கை முளைவிட்டது. ஏனெனில் அவர் கணித ஆசிரியர்.

சந்தோஷத்தோடு அவரருகில் சென்று வழக்கம் போல வணக்கம் வைத்தான். ஆயினும் அவரால் அவ்வணக்கத்தை இணக்கத்தோடு ஏற்க முடியவில்லை அன்று. காரணம் இன்பராஜனின் உடை, காலணியின் கூட்டணி. சங்கோஜமாக அவர் அந்தப் 'பெருந்தலையை' த் திரும்பிப் பார்த்தார்.

'யோவ் வாத்தி.. என்ன லுக்கு? பையன் வணக்கம் வைக்கறாப்புல.. வாங்கிட்டு வீட்டப் பாத்துப் போவியா?" என்று செல்லமாக (!?) அதட்டினான். இருக்கின்ற மரியாதையை ஏன் கெடுத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தாரோ என்னவோ, வெடுக்கென்று தலையை இன்பராஜனை நோக்கித் திருப்பி, அவஸ்தையாய்ப் புன்னகைத்த படியே 'வணக்கம்' என்று சொல்லி இடது பக்கம் திரும்பி பேருந்து வருகிறதா எனப் பார்க்கத் தொடங்கினார்.

போராடிப் பெற்ற பயணச்சீட்டினைக் கடைசி நேரத்தில் ரத்து செய்யும் பயணியைப் போன்ற நிலையில் இருந்தான். ஆசிரியர் தனக்கு ஆதரவாகப் பேசுவார் என்றிருந்தவனின் ஆசைகள் முடங்கிப் போனதில் வெளிவந்த முனகலை வெளிக்காட்டாது, அடுத்த நபரிடம் சென்றான். ஆசிரியருக்கே இந்த 'மரியாதை' என்றால், ஆசிரியைகள் பாடு கேட்கவா வேண்டும்? மெளனத்தை மொத்தக் குத்தகைக்கு எடுத்துக் கொண்டனர் ஏகமனதாக அங்கே இருந்த ஒரு சில ஆசிரியையைகள்.

மொத்தத்தில் அங்கு அரங்கேறிக் கொண்டிருந்த கூத்துக்கள் அனைத்தும் இன்பராஜனுக்கு மட்டுமே புதிதாக இருந்தன. மற்ற அனைவருக்கும் அது வாடிக்கையாகிப் போன வழக்கமாக அவரவர் வேலைகளில் கவனமாக இருந்தனர். ஒரு சிலர், "இந்தப் பசங்கக்கிட்ட எதுக்குப்பா நமக்குத் தேவையில்லாத பிரச்சினை? இன்னைக்கு அடிச்சிக்குவாங்க, நாளைக்குக் கூடிக்குவானுங்க.. " என்ற நினைப்பில் ஒதுங்கி இருந்தனர்.

இப்படியாக ஆளாளுக்கு நினைத்துக் கொண்டிருக்க மொத்தம் அங்கிருந்த 20 பேர்களுக்கும் வணக்கம் வைத்து முடித்தான் இன்பராஜன். முதலில் கூச்சப்பட்டவனுக்கு, மூன்று நான்கு ஆட்களிடம் சொன்னபிறகு, "சரி.. சும்மா வணக்கம் வைக்கிறது தானே? சட்டுன்னு வைச்சுட்ட்டா சீக்கிரம் விட்ருவாங்க" என்று நினைத்து சுறுசுறுப்பாகச் செய்து முடித்தான்.

அனைவருக்கும் வணக்கம் வைத்து முடித்த திருப்தியில், சந்தோஷத்தோடு 'தலை'களின் பக்கம் திரும்பி நடந்தான். அவர்களை நெருங்கி வந்து, "எல்லோருக்கும் வணக்கம் வைச்சிட்டேன் சார்" என்று கூறினான். அருகே பிணைக் கைதிகளைப் போல் அப்பாவியாக நின்றிருந்தனர் அகிலனும், ஆனந்தும் அவர்களின் சொல் அம்பலம் ஏறாத காரணத்தினால்.

ஏனையோர் அனைவரும் ஏகமனதாய் அதனை ஏற்றுக் கொள்ள அந்தப் 'பெருந்தலை' மட்டும் தீவிர சிந்தனையில் ஆழ்ந்திருந்தது.

விஞ்ஞானியின் தோரணையில் அவர் விட்ட புகை வளையங்கள் காற்றில் அவர் பெயரைப் பொறித்துக் கொண்டிருந்தன. இன்பராஜனின் அறிக்கை இவனை அசைத்திராத வேளையில் சகாக்களின் அதட்டல் உலுப்பியது. "டேய் பங்காளி, தம்பி இன்னைக்கு பாஸ் ஆயிட்டாப்புல" என்ற கோரஸ்.

படாரென்று திரும்பியவனின் முகத்தில் ஒரு திருப்தியின் சாயல். காரணம் பையன் ஒழுக்கசீலனாக, தான் இட்ட கடமையைச் செவ்வனே செய்து முடித்ததனால் அல்ல. பேருந்து நிறுத்தத்தை நோக்கி வந்து கொண்டிருந்த கல்லூரி அழகு மயில் 'திருப்தி' தான் காரணம். இரண்டாமாண்டில் படித்துக் கொண்டிருக்கும் இளவஞ்சி.

ஏறக்குறைய கல்லூரியின் ஏகோபித்த ஹீரோயின் இவள் தான். இவளுக்கான பக்தர்களின் வரிசையில் தாராளமாகத் தனக்கு ஓரிடத்தைத் தக்கவைத்துக் கொண்டிருப்பவர்களில் 'பெருந்தலையும்' ஒருவன்.

திருப்தியைக் கண்ட திருப்தி அவனுக்கு.... படீரென்று அவனின் மூளை நரம்புகள் ஷங்கர் படத்தில் வருவதைப் போல ஆங்காங்கே முறுக்கிக் கொண்டன. உள்ளே மின்னல் வெட்டியது போன்று ஒரு திடீர் உற்சாகம் மூளையின் மூலையில்.

முதன் முதலாய் முறுவலித்தபடியே பேசினான். "சரி தம்பி, வெரி குட்! இன்னைக்கு நல்லபடியா முடிச்சிட்ட.. போகப் போகப் பார்ப்போம்.." என்றான்.

(தொடரும்)..

Labels: ,

 
posted by Raghavan alias Saravanan M at 4/21/2008 08:28:00 PM, |

4 பின்னூட்டங்கள்:

Raghav,

Thrupthi nu oru pera different a irukku, heroine enter aana thaampa namakku kathai soodu pidikkum. Romba naal gap kudukkureenga continuity illama poirapoguthu, thodar arumaiya poguthu.
:) Neraya parts vituten..Seekram padichitu comment'ren!
@iniyal,

தாமதத்திற்கு மன்னிக்கவும். இடையில் சில காலம் வலைப்பூ பக்கம் வரவியலவில்லை.
நன்றாக் இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

தாமதத்திற்கு மன்னிக்கவும். இடையில் சில காலம் வலைப்பூ பக்கம் வரவியலவில்லை.

நன்றாக் இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

உங்கள் கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி. ஆம் நீங்கள் சொன்னது போலவே இடைவெளி மிகவும் நீண்டு விட்டது. கூடிய சீக்கிரம் அடுத்த பகுதியை வெளியிட வேண்டும் ;)

தோழமையுடன்,
இராகவன் என்ற சரவணன் மு.
@ponnarasi kothandaraman,

தாமதத்திற்கு மன்னிக்கவும்.

உங்கள் வருகைக்கு நன்றி. நேரம் கிடைக்கும் போது படியுங்கள். படித்து விட்டுக் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தோழமையுடன்,
இராகவன் என்ற சரவணன் மு.