Thursday, October 18, 2007

பிரதிநிதிகள்

ஒரு வேளை உணவுக்காக
இரு வேளைகள் காக்கவைத்த
வயிற்றுக்குக், காசு இல்லாவிட்டாலும்
கருணையோடு சோறுபோட்ட
உணவக முதலாளியும்,


அடுத்தடுத்து இருந்தாலும்
பார்வைகளைக் கூடத்
தடுக்கப் பழகிவிட்ட
அண்டைவீடுகளின் மத்தியில்
உடல்நிலை சரியில்லாத பொழுதினில்
பாசத்தோடு வெந்நீர் வைத்துப்
பரிவாக விசாரித்தனுப்பும்
தேநீர்க் கடைக்காரரும்,


எனக்கென்ன என்று
வேடிக்கை பார்ப்பவர்களை
எரிச்சலோடு ஏறிட்டு
ஆபத்தில் இருப்பவரை
எதிரேவந்த ஆட்டோவில்
ஏற்றி, "சீக்கிரமா ஆஸ்பத்திரிக்கு
போப்ப்பா" என்று தன்
கடமைகளுக்குத் தற்காலிக
விடுப்புத் தரும் தந்தை தெரசாக்களும்,


அறிமுகமாகிச் சில மாதங்களே
ஆனாலும் கட்டாயத்தின் பூச்சுகள்
கடுகளவும் இல்லாது சிநேகத்தின்
வழியாய்த் தாய்மை காட்டும்
அறைவாசிகளும்,


அள்ளி இறைப்பதற்கில்லை என்று
தள்ளி நிற்காமல் தன்னிறைவோடு
கிள்ளிக் கொடுக்கமுடியும் என்று
சுனாமியோ, பூகம்பமோ, குண்டுவெடிப்போ,
பாதிக்கப்பட்டவர்களுக்கு உபகாரமாய்
முடிந்தவரை முகமகிழ்ச்சியோடு
முன்வந்து உதவுபவர்களும்,


"உன் வயதில் நானும் இது போல
இருந்தவன் தான்" என உள்ளுக்குள்
சொல்லிக்கொண்டாலும், கண்டிப்பின்
பேரில் காணும் போதெல்லாம்
கசக்கிப்பிழியாமல், எப்படியும்
"வாழ்க்கைத் பயணத்தில் சில
நிகழ்வு எழுதுகோல்கள் உனக்கு
அனுபவ மை ஊற்றும்" என்று
அர்த்ததோடு சிரித்து அமைதியாய்த்
தட்டிக் கொடுக்கும் அப்பாக்களும்,


சரிக்குச் சரியாய் வேலையிருந்தும்
சகதொழிலாளியின் முகத்தில்
சவுக்கியத்தின் ரேகைகள்
சலவை செய்யப்பட்டிருக்கக் கண்டு
"உன் கவலைகளுக்கும் நான் தோழன்"
என்று கனிவோடு பறைசாற்றி
உள்ளக் குமுறலை உளமாறக் கேட்கும்
உன்னதமானவர்களும்,


கண்ணெதிரே தோன்றும்
கடவுளின் பிரதிநிதிகள்!!



இவர்களை ஒருமுறை பார்த்தால்
உடனடியாய் உள்மனம் குளிரும்!
எப்பொழுது நினைத்தாலும்
தன்னிச்சையாய் உதடுகள் ஒளிரும்!

Labels:

 
posted by Raghavan alias Saravanan M at 10/18/2007 08:03:00 PM, | 31 பின்னூட்டங்கள்
Wednesday, October 03, 2007

விரல்நுனி சிநேகம்

இது 'அன்புடன்' இணையக் குழுமத்தின் ஆண்டுவிழாவின் பொருட்டு நடத்தப்பெற்ற கவிதைப்போட்டிக்காக அனுப்பிய என் படைப்பு.
 
படித்துவிட்டு உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்களேன்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 தொடுதலில் விலகலா
விலகலில் தொடுதலா,

கேட்டபின் தருவதா

தானாக எடுப்பதா,

உதறி எடுப்பதா

உரிமையாய்க் கொடுப்பதா

எது எப்படியோ

உண்மையான வாஞ்சையுடன்

வருடும் போது

சத்தியமாய்க் கரையும்

உயிரின் மூலம்..

 

 

ஆழ்ந்த தழுவல்,

அகலத் தழுவல்,

அவசரத் தழுவல்

எவற்றோடும் சேராவிடினும்

அனைத்துக்கும் ஆதாரமாய்

ஒரு அன்பான தழுவல்!

 

 

வேருக்கு ஊற்றிய நீரில்லை இது

புல்நுனியில் பனி!!

அளவிடமுடியா அர்த்தம் சொல்லும்

நீ தொடும் என் விரல் நுனி!

 

 

உறவுகள் பேதமில்லை. உண்மை

அன்புக்கு வேதமில்லை.

 

அன்பு, பாசம், நேசம், காதல்,

காமம், மகிழ்ச்சி, நன்றி, நெகிழ்ச்சி, சோகம்,

பிரிவு, ஏகாந்தம், தன்னிரக்கம்

இப்படி உணர்வுகள் கலந்த அனைத்துப்

பரிமாற்றங்களிலும் தயவுசெய்து

ஒரு சிறு ஸ்பரிசத்தினை மட்டும் விட்டுவைப்போம்.

வயிறுமுட்டத் தின்றாலும் செரிப்பதற்குத்

தேவைப்படும் ஊறுகாயைப் போல.

 

 

அவசரமாய்ப் புறப்படும் நேரத்தில்

புணர்ச்சிக்கு இருக்காது அவகாசம்.

பிரிந்திருக்கும் நேரமெல்லாம் அன்பைப்

பறைசாற்றும் விரல்நுனியின் சகவாசம்.

 

 

பிறந்த சிசுவின் முதல் பாஷை,

குழந்தைப் பருவ சிநேகம்,

வகுப்பறைப் பிரிவுபசாரங்கள்,

இக்கட்டான சூழ்நிலைகள்,

எதிர்பாலருக்கான இயல்பான ஈர்ப்பு,

மனமார்ந்த மன்னிப்பு,

பிரிந்தபின் இணைப்பு,

புரியாத பரபரப்பு - இவை

எல்லாவற்றிலும் தேவையான அளவு

ஆதரவு இந்த ஒற்றைத் தொடுதலில் உண்டு!

 

 

ஆழ்கடலின் அகப்பட்டதை

அப்பட்டமாய்ப் படம்பிடிக்கும்

கலைடாஸ்கோப் மாதிரி

ஆழ்மனதின் பொக்கிஷங்களை

அழகாய் வெளிக்கொணரும் இந்த ஸ்பரிசம்!

 

 

மழையில் ஈரப்பதம்,

நெருப்பில் கதகதப்பு,

நட்பில் புரிதல்,

உறவில் விட்டுக்கொடுத்தல்,

தாய்மையில் மன்னிப்பு,

அன்பில் ஸ்பரிசம்! ஒரு

அருமைக் கவசம்!

 

 

ஆயிரம் பக்க வசனங்கள்,

மூன்றரை மணி நேரத் திரைப்படம்,

முக்கால் நாள் உடனிருத்தலை விட,

அரை நிமிட அக்கறையான சம்பாஷணை

அழகாய் அரங்கேறும் விரல்நுனியில்!

 

 

புரிதலின் அர்த்தமாய்ப் புலப்படும் இந்தத்

துரிதநிலைத் தொடு உறவு.

 

தானாக முன்வந்து

தயங்காமல் அன்புசெலுத்துகையில்

தாய்மை உணர்வில் சிறுபகுதி

தாரை வார்க்கப்படும் இந்தத்

தன்னம்பிக்கையோடு கூடிய

ஒரு விரல்நுனி சிநேகத்தில்!

 

 

பல நேரங்களில் இது

முதல்நாள் மூலதனம்

சில தருணங்களில் இது

கடைசிநேரக் கையிருப்பு!

 

 

சிறுதுளி பெருவெள்ளமாமே?

ஒவ்வொரு உறவையும் அன்போடு கூடிய

அமைதியான தொடுதலில் ஆரம்பிப்போம்!!

 

 

வருங்கால சந்ததியினருக்குத் தொண்ணூறு

வயதுக்கிழவன் நடும் கன்றாய்

வயதுகளில் பேதமின்றி அனைவரும்

ஒற்றுமையோடு வாழ்வோமே நன்றாய்!

Labels: ,

 
posted by Raghavan alias Saravanan M at 10/03/2007 06:39:00 PM, | 16 பின்னூட்டங்கள்