கனாக் காணும் காலங்கள் - 2
வீடு வந்து சேர்ந்த இன்பராஜன் அம்மாவிடம் எப்பொழுதும் போலப் பிரசாதத்தைக் கொடுத்துவிட்டு, "கோவில்ல நல்ல கூட்டம்மா இன்னைக்கு" என்று சொல்லி அடுக்களைக் கதவருகே அமர்ந்தான். "ஆமாம்பா.. நல்ல நாள் பெரிய நாள்ல கூட்டம் இருக்கத்தான் செய்யும்.. " என்று சொல்லி, அடுப்பில் இருந்த பணியாரச்சட்டியைக் கவனித்தார் இன்பராஜனின் அம்மா லட்சுமி. அவரைப் பொறுத்த வரை "அடுப்படியே திருப்பதி, ஆம்பிளையானே தெய்வம்" என்று வாழ்பவர். எனினும் குளித்துவிட்டுத் தினமும் காமாட்சி விளக்கின் முன் ஒரு பத்து நிமிடம் கண்டிப்பாய்ச் செலவழிப்பார். அவருடைய மனமார்ந்த பிரார்த்தனை நேரம் பெரும்பாலும் அவ்வளவே.
"அம்மா, அப்பா எங்கேம்மா?" என்று கேட்டுக் கொண்டே வந்தாள் ஜனனி. இன்பராஜனின் தங்கை. கடைக்குட்டி என்பதால் செல்லம்! கேட்கவே வேண்டாம். தீபாவளி என்பதால் அவளுடைய கொள்கைக்கு விரோதமாகப் பாதித் தூக்கத்தில் எழுப்பி விடப்பட்டாள் ஆறு மணிக்கெல்லாம். இருப்பினும் முடிந்த அளவு கிடைக்கின்ற இடைவெளிகளில் எல்லாம் ஒரு சிறு துயில் கொண்டது அந்தப் பூங்குயில்.
"ஸ்கூல் இருந்தாத் தான் சீக்கிரமே எந்திரிச்சுக் குளிச்சுக் கெளம்பணும். இன்னைக்குத் தான் அவங்களே ஜாலியா லீவு விட்டுட்டாங்கள்ல.. என்னடா அண்ணா?" என்று காலையிலேயே ஒரு கச்சேரியை ஆரம்பித்திருந்தாள். எப்பொழுதும் சரிக்குச் சரி மல்லுக்கு நிற்கும் இன்பராஜன் இன்று நின்றால் பல்லு எகிறும் என்று பயந்து, "ஆமாடா வாலு! நீ சொன்னா சரித்தான் பாட்டிம்மா. எட்டாம் வகுப்புலயே என்னம்மா வேதாந்தம் பேசுற..சீக்கிரம் குளிச்சு ரெடியாகு.." என்று ஒத்து ஊதிவிட்டுக் கோயிலுக்குக் கிளம்பியிருந்தான். இப்பொழுது அப்பாவைக் கேட்டு வந்தவள் எங்கே பாதியில் விட்டுச் சென்ற கச்சேரிக்கு மீண்டும் சுதி சேர்ப்பாளோ என்று நினைத்தவனாய், "அப்பா இந்நேரம் பூஜையை முடித்திருக்கணுமே" என்று ஒரு நக்கல் சிரிப்புச் சிரித்தான்.
"அப்படின்னா நான் இந்நேரம் பாத்ரூமுக்குள்ளே இருந்திருக்கணுமே" என்று விருட்டென்று ஓடினாள் ஜனனி.. செல்லம் கொடுக்க வேண்டிய இடத்தில் செல்லமும், கண்டிப்பாய் இருக்க வேண்டிய தருணங்களில் தேவையான கண்டிப்புமாய் சரியான விதத்தில் தன் பிள்ளைகளை வளர்ப்பதில் ஒரு பெருமிதம் கொண்ட தகப்பனாய் வலம் வந்தார் சுந்தரராஜன்.
பூஜையைப் பொறுத்தமட்டில் அம்மா லட்சுமிக்கு எதிர்ப்பதம் அப்பா சுந்தர்ராஜன். சாதாரண நாட்களிலேயே தினமும் குறைந்தது ஒரு மணி நேரமாவது பூஜை செய்பவர் இன்றைக்குத் தீபாவளி என்பதால் சற்றே கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டார். அம்மா அடுப்படியிலிருந்து கொடுத்து அனுப்பிய பலகாரங்களாகட்டும், அவர் வரும்போதே கொண்டு வந்திருந்த புதுத் துணிகளாகட்டும், பூஜைக்குத் தேவையான தேங்காய், பழங்களாகட்டும் அத்தனையும் ஸ்லோகங்களையும், சாமி பாட்டுக்களையும் சொல்லிக் கொண்டே அழகாய் அடுக்கி வைத்துக் கொண்டிருந்தார். கணிப்பொறி படிக்காமலேயே Parallel Processing, Multi tasking களில் கைதேர்ந்த வித்தகர்.
"பச்சை மரகதத் திருமேனிபைந்தமிழ்க் கூடல் மகராணி
அச்சம் களையும் தேனாட்சி
அன்பாய்ச் செய்யும் மீனாட்சி
உச்சிக் கருணை உன்பாதம்
உருகித் தொழுதால் அதுபோதும்
மெச்சும் நிலைமை உருவாகும்
மேன்மைச் சுகங்கள் விளைவாகும்"
என்ற வரிகளைக் கேட்டபடியே உள்ளே சாமி வீட்டினுள் நுழைந்த இன்பராஜன் தானும் அப்பாவுடன் சேர்ந்து கொண்டான். கூட மாட வேலை செஞ்சாத்தானே சீக்கிரம் ரெடியாகிப் புதுத்துணி உடுத்திப் பட்டாசு வெடிக்கலாம் என்ற ஆசை அவனுக்குள்.
+2 முடிச்சு அடுத்த வருஷம் வெளியூருக்குப் படிக்கப் போற மாதிரி வந்தா, லீவு கெடைக்குமோ கெடைக்காதோன்னு அவனுக்குள் அந்த வயசுக்குண்டான ஒரு எதிர்பார்ப்பு, ஆசை, கனவு எல்லாமே கலந்து கதகளி ஆடின.
ஒரு வழியாக ஜனனி இன்று மற்றவர் நலன் கருதி ஒரு பொது நலத் தொண்டாற்றினாள். ஆம் சீக்கிரமாகக் குளித்து முடித்தாள். அம்மாவும் பலகாரங்கள், காலைச் சிற்றுண்டி எல்லாம் செய்து முடித்து அனைவரும் பூஜை அறையில் ஆஜராயினர்.
அப்பா எல்லாத்துணிகளுக்கும் மஞ்சள் வைத்து முடிக்கவும், அம்மா விளக்கேற்றவும் எல்லோரும் சாமி கும்பிட, அப்பா எல்லோருக்கும் துணிகளை எடுத்துக் கொடுக்க இன்பராஜனும், ஜனனியும் பெற்றோர்கள் கால்களில் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து, துணிகளைப் பெற்றுக் கொண்ட நேரம் தான் அவர்களைப் பொறுத்த வரை தீபாவளி பிறந்த நேரம்!
ஒரே ஓட்டமாக ஓடி, அவசர அவசரமாய்ப் புத்தாடை உடுத்திப் பட்டாசுகளை வெடிக்க ஆயத்தமானார்கள் அண்ணன் தங்கை இருவரும்!
"ஏய் வாலு! உன் டிபார்ட்மெண்ட் நைட்ட்டு தான். மிஸ்டர். கம்பி மத்தாப்பு, மிஸ். புஸ்வாணம் எல்லாமே உனக்காக .. எல்லாம் உனக்காக" என்ற சந்திரபாபு ஸ்டைலில் பாடினான்.
"போடா லூசு! அது போன வருஷம்.. இந்த வருஷம் நான் அணுகுண்டு வைப்பேனாக்கும்" என்ற படி பங்குக்கு இவளும் வம்பிழுத்தாள்.
"ஆத்தாடி, வாயிலயே அணுகுண்டை வச்சிட்டியே இப்ப..சரி சரி.. பாக்கறவங்க பயந்துரப் போறாங்க.. அண்ணன் முதல்ல சரம் வைப்பேனாம்.. ஜனனிக்குட்டி ஒழுங்கா சுவரோரமா வழக்கம் போல பயந்துக்கிட்டே வேடிக்கை பாப்பியாம்.. என்ன?" என்று வெடியோடு ஓடினான் வெளியே.
"அம்மா.. இந்த அண்ணாவைப் பாரேன்... எனக்கு வெடியே தரமாட்டேங்கிறான்..." என்று வீம்புக்கு அம்மாவிடம் புகார் செய்ய ஓடினாள்.
அவ்வப்பொழுது வம்புக்கு இழுத்து, சீண்டி அது ஒரு சிறு சண்டையில் முடிந்து அப்பா,அம்மா பஞ்சாயத்து செய்வதில் இருக்கிற சுகம்.. அப்பப்பா.. ஆயுசுக்கும் இருக்கும் அந்தச் சிறு வயதுச் சிலிர்ப்புகள்.
சண்டைகள் சமாதானமாகி எல்லோரும் சாப்பிட்டு முடித்த பின் இன்பராஜன் டியூஷனுக்குக் கிளம்பினான். தீபாவளி, பொங்கல் இதற்கெல்லாம் விடுமுறை எடுக்கிற வருஷமா அது? அவரவர் வாழ்க்கையை நிர்மாணிக்கும் வருடம் அல்லவா? அதனால் டியூஷன் மாஸ்டர் சொன்னதற்கிணங்க மாணவர்களும் தத்தம் வாழ்க்கைப் பாதைக்காகத் தங்களை வார்க்கத் தயாரானார்கள்.
அறிந்தும் அறியாமலும், புரிந்தும் புரியாமலும் பொட்டை மனப்பாடம் செய்து தட்டி உருட்டி மென்று விழுங்கிப் பரீட்சையில் அப்படியே துப்பி மார்க் வாங்கும் கட்டாயம் வரக்கூடாது என்பதில் இன்பராஜன் கவனமாய் இருந்தான். அதனால் சற்றே தனக்கான பொழுதுபோக்கு அம்சங்களைத் தளர்த்தி முழுமனதோடு படித்தான்.
எதிர்பார்த்த மதிப்பெண்கள் வாங்க வேண்டும், எதிர்பார்த்த கல்லூரியில் இடம் கிடைக்க வேண்டும் என்று சற்றே பயம் கலந்த குழப்பம் இருந்தாலும், அவற்றை எல்லாம் தற்காலிகமாய் மூட்டை கட்டி வைப்பதே சிறந்தது என்பதை நன்கறிந்திருந்தான் இன்பராஜன்.
மகனின் கனவுகளை நனவாக்குவதில் தந்தைக்கும் பங்கு உண்டல்லவா? அவன் தன் பங்குக்கு அறிவைச் சேர்க்க, இவர் தன் பங்குக்குப் பணத்தைச் சேமிக்க ஆரம்பித்திருந்தார். மாணவர்களுக்கு மட்டுமல்லாது நடுத்தர வர்க்கப் பெற்றோர்களுக்கும் அல்லவா பன்னிரண்டாம் வகுப்பு ஒரு நல்ல பரீட்சை வைக்கிறது.
ஒவ்வொருவர் வாழ்விலும் நிச்சயமாய்க் கனவுகள் இருக்கும். கனவுகள் நிறைவேற உழைப்புடன் கூடிய பிரார்த்தனைகளும் இருக்கும்.
தந்தை மகற்காற்றும் உதவியும், மகன் தந்தைக்காற்றும் உதவியும் செவ்வனே முடிந்தால் சிறப்பாய்த் தான் இருக்கும்...
(தொடரும்).....
பின்குறிப்பு: "பச்சை மரகதத் திருமேனி" பாடலை இயற்றியது என் தந்தை "சிவநெறிக்கவிஞர் திரு. இராகவன் முத்து". என் தலையாய ஆசானுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் இங்கே!
Labels: கனாக் காணும் காலங்கள், தொடர்கதை
12 பின்னூட்டங்கள்:
//Raghs na, reminds me the days i fought with my sister.. Cousins.... நினைத்தாலே இனிக்கும் நாட்கள் !//
நன்றி தம்பி! உன் மனதின் உணர்வுகள் இங்கே வரிவடிவமாய் இருப்பதில் பெரு மகிழ்ச்சி ஹீரோ சார்! :)
Kavithaiyum super..Appaku sollunga! :)
//Tamil romba nalla ezhuthureenga! Very nice//
நன்றி.
//I did enjoy reading! Waiting for the next part...//
மிக்க மகிழ்ச்சி.
//Kavithaiyum super..Appaku sollunga! :)//
அவசியம் சொல்கிறேன். :)
//I mean life'la neraya moments miss panitom'nu feel panra vishayathula ithuvum onnu :)//
இது சரி. ஒத்துக் கொள்கிற மாதிரி இருக்கிறது.
//and intha pattasukku sanda podrathu happenings btwn janani and inbaraj are kind of new 2 read for me :)//
இது புரியலையே! உங்களுக்குப் புதிது என்றால்? நீங்கள் அனுபவித்ததில்லையா இந்தச் சண்டைகளை?
//
the same happened to me every year.Nalla velai intha varasum apadi ellam nadakala ;)aanna enna kodumaina 3 manike train coimbatore vanthathanu kettu trainlaye ezuppi vittutanga :(
[tamil software illathathaal english il adikum padi aanathu,kastha pattavathu padinga]
//ஒரு வழியாக ஜனனி இன்று மற்றவர் நலன் கருதி ஒரு பொது நலத் தொண்டாற்றினாள். ஆம் சீக்கிரமாகக் குளித்து முடித்தாள்
//
[Superb ;) keep it up]
//"பச்சை மரகதத் திருமேனி" பாடலை இயற்றியது என் தந்தை "சிவநெறிக்கவிஞர் திரு. இராகவன் முத்து". என் தலையாய ஆசானுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் இங்கே!//
[Magan thanthaikku aatrum udavi ivan thanthai enn nOtraan kol enum sol]
Your father must be proud of urself
nice story and keep going
all the best
//the same happened to me every year.Nalla velai intha varasum apadi ellam nadakala ;)aanna enna kodumaina 3 manike train coimbatore vanthathanu kettu trainlaye ezuppi vittutanga :(//
அடடா.. இம்முறையும் சாத்தியப்பட்டிருக்கும் நீங்கள் உங்கள் வீட்டிலேயே இருந்திருந்தால் :)
//[tamil software illathathaal english il adikum padi aanathu,kastha pattavathu padinga]//
ஒன்றும் கடினம் இல்லை தோழி! பெரும்பாலும் நானும் இம்முறையைப் பின்பற்றுவதால் (அதே தமிழ் மென்பொருள் இல்லாத இடங்களில்).
//[Magan thanthaikku aatrum udavi ivan thanthai enn nOtraan kol enum sol]
Your father must be proud of urself
nice story and keep going
//
நன்றி வந்தமைக்கும் வாழ்த்துச் சொன்னமைக்கும்!
மீண்டும் வருக!
Arumai..Idhai palar vaazhkaiyil purindhu kondu vittal,nandraga irukkum
Tc
CU
வருக வருக!
//Arumai..Idhai palar vaazhkaiyil purindhu kondu vittal,nandraga irukkum//
நன்றி. மிக அருமையாகச் சொன்னீர்கள்.
மீண்டும் வருக.
சரி படிச்சவன் என்ன செஞ்சான்னு அடுத்த பதிவுல தெரிஞ்சிக்குவோம். :)
//என்னது... காலத்தேர்ல ஏறி முன்னாடி போய் எட்டிப் பாக்குறீங்களா? :)//
வாங்க இராகவரே.. இது என்னது? யாரைக் கேக்கறீங்க? ஏதும் உள்குத்து இல்லையே? :)
//சரி படிச்சவன் என்ன செஞ்சான்னு அடுத்த பதிவுல தெரிஞ்சிக்குவோம். :)//
அடுத்த பதிவு போட்டாச்சேய்... :) அங்க மீட் பண்றேன் உங்களை...
Raghs na, reminds me the days i fought with my sister.. Cousins.... நினைத்தாலே இனிக்கும் நாட்கள் !