Thursday, January 10, 2008
பூக்களில் உறங்கும் மெளனங்கள்

புரிந்து கொள்ளாத பூவையர்
பற்றிய புலம்பல்கள்
கண்டு கொள்ளாத காளையர்
பற்றிய கவலைகள்
படிப்பைத் துறக்க வைக்கும்
தொழிலின் மீதான வருத்தங்கள்
கடைசி நேரத்தில் பயணச்சீட்டினை
ரத்து செய்யும் நிர்ப்பந்தங்கள்
தவறாகப் புரிந்து கொண்டதற்காய்
விரிசல் விட்ட உறவின் விசும்பல்கள்
தவிர்க்கப்பட்ட காரணத்தால் தயங்கி
நிற்கும் பெற்றோர்களின் தவிப்புகள்
விதியின் வசமென விலகி நின்று
விட்டுவிட்ட சந்தர்ப்பங்களின் ஆற்றாமைகள்
எழுதப்பட்ட நபரைத் தவிர அனைவருக்கும்
புரிந்த கவிதையின் மீதான கழிவிரக்கங்கள்
திறமைகளின் வீரியங்களைச் சமயத்தில்
நட்பிற்காய் விட்டுக்கொடுத்த பெருமிதங்கள்
நெருக்கங்கள் நிறைய இருந்தும்
பந்தங்களைச் சுணக்கிய தயக்கங்கள்
மெய்வருத்தக் கூலியும் பொய்யாகிப்
போகுங்கால் வெளிவரும் விரக்திகள்
உள்ளத்தின் உணர்வுகளை உள்ளேயே
பொத்தி வைத்து உருகும் உளறல்கள்
யாரென்றே தெரியாத தருணங்களிலும்
இடர்கண்டு இளகும் இதயங்களின் இணக்கங்கள்
வெகுகாலம் பிரிந்திருந்து சந்திக்கையில்
கணப்பொழுதில் ஊற்றெடுக்கும் உற்சாகங்கள்
தீர்மானிக்கப்படாமல் சுமத்தப்பட்ட பழியையும்
தெளிவோடு ஏற்கும் தியாகங்கள்
இருக்கும் காலம்வரை இறுகியிருந்தும்
பிரியும் பொழுதினில் இளகும் பெருமூச்சுக்கள்
எங்கிருந்தாலும் நல்லாயிரு என்று மட்டும்
வாழ்த்தும் தாயுள்ளங்களின் நெகிழ்வுகள்
இப்படிப் பலவாறாய் மாந்தர் வெளியிடும்
உணர்வுக் கதம்பத்தினை உள்வாங்கியும்
தன்கடன் பணிசெய்து கிடப்பதாய்ப்
புன்னகையோடு பூத்துக்குலுங்கும்
பூக்களில் உறங்கும் மெளனங்கள்..
குறிப்பு: இக்கவிதை சிறில் அலெக்ஸ் நடத்தும் "நச்" கவிதைப் போட்டிக்காக எழுதப்பட்டது.
நன்றி: சக வலைப்பதிவர் வேதாவிற்கு.
Labels: போட்டி