Thursday, March 06, 2008

கனாக் காணும் காலங்கள் - 5

அன்பு நண்பர்களே,

பணிப்பளு சற்றே அதிகமிருந்த காரணத்தினால் இடையில் ஏற்பட்ட இடைவெளிக்கு மன்னிக்க வேண்டுகிறேன்.



கதையின் முந்தைய பகுதியைப் படிக்க, இங்கே சொடுக்கவும்.

தானே எடுத்த முடிவு தான் என்றாலும் அதில் ஒரு தன்னம்பிக்கையின் விதை விருட்சம் கொண்டதாய் முழுமனதோடு உணர்ந்திருந்தான் இன்பராஜன். எடுத்திருந்த துறையில் மிகுந்த ஈடுபாடு கொண்டு படிக்கவேண்டும் என்றும் ஒரு தீவிரம் கொண்டவனாய் நேரடியாய் இரண்டாமாண்டில் அடியெடுத்து வைத்தான். +2 முடித்த காரணத்தினால் நேரடியாகவே தொழிற்கல்வியில் இரண்டாமாண்டு சேர ஒரு வாய்ப்பு இருந்தது.

பெரும்பாலும் தொழிற்கல்விப் படிப்பில் பத்தாவது படித்த மாணவர்கள் முதல் வருடமும், பன்னிரண்டாவது முடித்த மாணவர்கள் நேரடியாய் இரண்டாம் வருடத்திலும் சேர்வது வழக்கம். இன்பராஜனுக்குக் கல்லூரிப் படிப்பு என்ற சொல்லே உள்ளே பல பட்டாம்பூச்சிகளைப் பாகுபாடின்றி அனுப்பியது.

முதலாண்டிலேயே சேர்ந்திருந்த மாணவர்களுக்கு எல்லாவிதமான 'புது' அனுபவங்களும் அவ்வருடத்தோடேயே முடிந்து இரண்டாம் வருடத்தில் அவர்கள் 'தேர்ச்சி' அடைந்திருப்பர். அடுத்து வரும் இளையவர்களை அவர்களுக்கு இழைக்கப்பட்ட 'ராகிங்'கை விட அதிகபட்சமாய் அளித்து அதில் ஒரு திருப்தி காண்பர். பெரும்பாலும் அதில் அவர்கள் தங்கள் மூத்த மாணவர்களைப் பழிவாங்கி விட்ட ஒரு குரூரமும் இருக்கும்.

சில சமயங்களில் மாணவர்களுக்கிடையே ஒரு ஒருமித்த கருத்தும் உண்டு. ராகிங் செய்தால் தான் ஒருவன் மற்றவர்களைப் பற்றி நன்றாக அறிந்து கொள்ள முடியும் என்பது. மேலும் எல்லாவித 'பரீட்சைகளும்' முடிந்த பின், அது ஒரு நல்ல நட்பின் துவக்கமாய் அமையும் என்பது இந்த மேதைகளின் 'மேன்மை'யான கருத்தும் கூட.

இன்பராஜன் நேரடியாய் இரண்டாமாண்டில் நுழைந்திருந்தாலும் கல்லூரிக்குப் புதிது என்ற ஒரு தகுதியே போதுமானதாய் இருந்தது அவனுக்கு. ஆசை ஆசையாய்ப் பயிலகத்தின் கட்டிடங்கள், நூலகம், ஆய்வறை, அவனுடைய துறையின் மேலாளரின் அறை எனப் பார்வையை ஓட்டியபடியே வந்தவனை நிறுத்தியது ஒரு அதட்டல்.

"சார் யாரு?" என்று.

"நான் இங்க இந்தக் கல்லூரியில் ECE 2nd year Student" என்று பாந்தமாகப் பதில் சொன்னான்.

"அது சரி. உங்களுக்கு பேரு, ஊரு எல்லாம் கிடையாதா?" என்று அடுத்த கேள்வி தாக்கியது.

"இன்பராஜன், இங்க தான் காரைக்குடி" என்றான்.

"சரி.. பேருக்கு இனிஷியல் எல்லாம் கிடையாதா?" என்று மடக்கப்பட்டான் வழக்கம் போலவே.

"ஆஹா..இது தானா அது?" என்று வடிவேலு ஸ்டைலில் உள்ளுக்குள் உறுமிக் கொண்டே, "இன்பராஜன் எஸ்" என்று இவனும் பதிலிறுத்தான். இது எப்போடா முடியும் என்று இவன் நறநறத்ததின் பலனாக,

"சரி சரி.. அப்புறம் பாக்கறேன்" என்று கூறிய படி பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தது அந்தப் 'பெருந்தலை'.

'அப்பாடா.. நல்லது' என்று தலையைத் திருப்பிப் பார்க்கையில் வராந்தாவில் வந்து கொண்டிருந்த கல்லூரி முதல்வரைப் பார்த்தான். இருப்பினும் 'விடாது கருப்பு' என்று ஒரு கடைசிக் கொக்கியைப் போட்டான் எதிரில் நின்றிருந்தவன்.

"சரி.. எந்த Department சொன்ன? ECE 2nd year தான?" என்று தெளிவாக உறுதி செய்து கொண்டு, "குட்மார்னிங் சார்" என்றபடியே வணக்கம் வைத்து நகர்ந்தான்.

"என்னப்பா ராகிங்கா?" என்று சிரித்தபடியே கேட்டார் முதல்வர். "அப்படி எல்லாம் ஒண்ணுமில்லை சார். தம்பி வழிகேட்டாப்புல Department போறதுக்கு அதான்" என்று ஒரு 'அக்மார்க் உண்மை'யை வெளியிட்டான்.

"இதெல்லாம் நாங்க பாக்காததா?" என்று உள்ளுக்குள் நினைத்தவராய் "சரி சரி... நேரமாச்சு. வகுப்புக்குப் போ" என்று அவனைக் கடந்து இவனிடம் வந்தார்.

"என்னப்பா.. இங்க நிக்குற? Any problem?" என்று கரிசனத்தோடு கேட்டார்.

"ஒண்ணுமில்லை சார்" என்றான்.

"சரி உன் பேர் என்ன? எந்தத் துறை?" என்றார்.

இது அடுத்த ரவுண்டா என்று உடனடியாய் உள்ளெழுந்த கேள்வியை உருக்குலைத்து, "இன்பராஜன் சார். Lateral Entry, ECE 2nd Year" என்றான்.

"சரி சரி. அதோ அங்க இருக்கு பாரு உன் வகுப்பறை. All the best! எதாவது பிரச்சினைன்னா பயப்படாம எங்கிட்ட சொல்லு" என்று வகுப்பறைக்கு வழிகாட்டி விட்டு நகர்ந்தார். ஒரு வழியாக வகுப்பறைக்குள் நுழைந்தான்.

"May I come in Sir?" என்று ஒரு அழைப்புக் குரல் கேட்டதும் அதுவரை வேற்றுமை பாராட்டிய அத்துணை சகவகுப்புத்தோழர்களின் கண்களும் ஒற்றுமை காட்டின வாயிலை நோக்கி!

"Yes, come in" என்று அனுமதி அளித்த ஆசிரியர், "New Admission ஆ?" என்று ஒரு வழக்கமான மற்ற மாணவர்களுக்குப் புளிக்கத் துவங்கியிருந்த ஆனால் புது மாணவர்கள் அனைவருக்கும் புத்துயிர் அளிக்கக் கூடிய ஒரு கேள்வியைக் கேட்டார்.

"Yes sir" என்று உற்சாகத்தோடு சொன்னான் இன்பராஜன்.

"What is your name? Please introduce yourself" என்றார். வழக்கமான கேள்வி தான். அவனும் சுய அறிமுகத்தைத் தந்துவிட்டு ஆசிரியர் காட்டிய அவனுடைய இருக்கைக்குச் சென்றான். அது மின்னணுவியல் சம்பந்தப்பட்ட வகுப்பு. மின்கடத்தி, தேக்கிகளைப் பற்றிய வகுப்பு! வகுப்பு முடிந்ததும் தான் தாமதம், இன்பராஜனைச் சுற்றி மொய்த்தனர் தோழர்கள்.

அவரவர்களுக்கு விருப்பப்பட்ட கேள்விகளை அவரவர்க்கு உகந்த தொனியில். இவனும் அனைத்தையும் ரசித்தபடியே பதில் சொல்லத் துவங்கினான். +2 முடித்தவன் என்பதால் பெரும்பாலும் இவன் எதிர்பார்க்காமலேயே ஒரு மரியாதை வந்தது தோழர்களிடமிருந்து. வெகு சிலரே ஒருமையில் அழைத்தனர்.

இவனைப் போலவே நேரடியாய் இரண்டாமாண்டு சேர்ந்திருந்த சிலர் சற்றே கூடுதல் பிரியத்தோடு குசலம் விசாரித்தனர். +2 சம்பந்தப்பட்ட தேர்வுகள், மதிப்பெண்கள், என்னென்னெ கல்லூர்களில் விண்ணப்பித்திருந்தான் இப்படி சற்றே விட்டம் கூடிய கேள்விகளின் வட்டம் அது!

ஒருவாறாய் மின்னணுவியல், கணிதம், கணிப்பொறி சம்பந்தப்பட்ட வகுப்புகள் நடந்து முடிந்தன. முதல்நாள் என்பதால் அனைத்து வகுப்புக்களிலும் ஒவ்வொரு ஆசிரியரின் வேண்டுகோளுக்கிணங்க இவனும் சுய அறிமுகம் செய்த வண்ணம் இருந்தான்.

மதிய இடைவேளையில் உரையாடல்களின் தொடர்ச்சி நடந்தது. பிறகு ஆய்வறைக்குச் சென்றனர் அனைவரும்.

எத்துணை வருடங்கள் கடந்தாலும், பள்ளியில், கல்லூரியில் முதலாமாண்டில் முதல் முதல் நாளை மறக்க முடியுமா? முதல் முத்தம், முதல் சம்பளம் போன்று இந்த முதல் நாட்கள் நிச்சயமாய் ஒரு முக்கிய இடம் பெற்றிருக்கும் அனைவரிடத்தும். இன்பராஜனும் தன் முதல் நாளின் அனுபவங்களைச் சுகமாய் அசை போட்டபடியே வீடு வந்து சேர்ந்தான். எப்பொழுதும் போல கூடு வந்த சேர்ந்த குஞ்சுப்பறவைக்காகக் காத்திருந்தது தாய்ப்பறவை. அன்று மாலைப்பொழுது ரம்மியமாகக் கழிந்தது அம்மா, அப்பா, ஜனனியின் களிப்போடு கூடிய கலந்துரையாடலில்.

இரண்டாம் நாள் வழக்கம் போலவே அமைதியாக ஆரம்பித்திருந்தது. தாமதமாய்ச் சேர்ந்ததனால் இன்பராஜனுக்கு மட்டுமே அது இரண்டாவது நாள். மற்ற மாணவர்களுக்கு ஏற்கெனவே ஒரு மாதத்திற்கு மேல் வகுப்புகள் நடந்து முடிந்திருந்தன.

வகுப்பிலும் சில நண்பர்கள் கிடைத்திருந்தனர். அவனருகிலேயே அமர்ந்திருந்த செந்தில் மிகவும் அமைதியான சுபாவம் கொண்டவன். தானாகவே அறிமுகப்படுத்திக்கொண்ட ஆனந்த், எப்பொழுதும் குறும்பாகப் பேசும் அகிலன், வகுப்பறையைக் கலகலப்பாக வைத்திருக்க உதவும் அழகுபாண்டி எனச் சிலர் வெகு சீக்கிரமே இன்பராஜனுடன் நன்கு ஒட்டிக்கொண்டனர்.

ஆனந்த், அகிலன் இவர்கள் வெளியூர் என்பதனால் கல்லூரி விடுதியில் தங்கியிருந்தனர். இவனுடன் நன்கு பழகியிருந்த காரணத்தினால் விடுதிக்கு வரச்சொல்லி அழைத்தனர். சரி எப்படித்தான் இருக்கிறது எனப்பார்ப்போம் என ஒரு உந்துதலில் இன்பராஜனும் சென்றான். அவனுக்கும் அடிமனதில் இந்த ஆசைகள் இருந்தனவே.

விடுதி கல்லூரியை ஒட்டியே இருந்தாலும், போகும் வழியில் ஒரு தேநீர்க்கடையில் நின்றனர் தோழர்கள். "என்னடா உங்களுக்கு ஹாஸ்டல்ல டீ கிடையாதா?" என்றான் இன்பராஜன். "அந்த வெந்நித் தண்ணிய குடிக்கிறதுக்கு சும்மாவே இருக்கலாம் டா.. இந்த மாஸ்டர் போட்ற டீ எவ்வளவோ பரவால்ல..என்ன மாஸ்டர்? " என்றபடியே "3 டீ மாஸ்டர்.. ஸ்ட்ராங்கா" என்றான் அகிலன். "ஏண்டா சொல்ல மாட்டே நீ?" என்று சிரித்தபடியே சொன்னார் டீ மாஸ்டர்.

தேநீர் அருந்தியதும் தன் கணக்கில் வரவு வைக்கச் சொன்னான் அகிலன். விடுதி, கணக்கு எல்லாமே சற்று புதிதாக இருந்தது இன்பராஜனுக்கு. சின்னச் சின்ன விஷயங்கள் தான்! இருந்தாலும் தான் இதெல்லாம் அனுபவித்ததில்லையே எனும் பொழுது வித்தியாசமாகவும் இருந்தது!

கடையை விட்டு வெளியே வரும் பொழுது இன்னொரு 'பெருந்தலை' வந்தது. அவர் மிகப் பாசமாகப் பேசுவதைக் கண்டதும் இன்பராஜனுக்கு ஆச்சரியம் தாளவில்லை. அருகே நின்றிருந்த ஆனந்திடம் குசுகுசுத்தான். "என்னடா இவ்ளோ நல்லாப் பேசுறாரு. ரொம்ப நல்ல சீனியர் போல" என்றான். "அதெல்லான் ஒண்ணுமில்லடா. அடைப்புப் போடறதுன்னா இப்படித்தான் அன்பு பிச்சிக்கும்" என்றான். "அடைப்புன்னா?" என்று கேள்வி கேட்டு நிறுத்தினான் இன்பராஜன். "பொறுத்திருந்து பார்" என்றான் ஆனந்த.

சற்று நேரத்தில், இரண்டு சிகரெட் பாக்கெட், 5 வாழைப்பழங்கள், 1 பிஸ்கட் பாக்கெட், 10 சுகந்தப் பாக்கு இவற்றையெல்லாம் பொட்டலம் கட்டச் சொல்லி அகிலனின் கணக்கில் வரவு வைத்துச் சென்றார் அந்த 'பாசக்கார சீனியர்'.

"அடப்பாவி.. இதுக்கெல்லாம் காசு? " என்றான் இன்பராஜன். "எங்க அப்பா மாசாமாசம் அனுப்புற பணத்துல இப்படி ஒரு தண்டச் செலவு" என்றான் அகிலன்.

"டேய் இதெல்லாம் ஹாஸ்டல் வார்டன் கிட்ட சொல்ல வேண்டியது தானே?" என்றான் இன்பராஜன்.

"சொல்லி ஏதாச்சும் பிரயோஜனம் இருந்தாப் பரவால்லடா.. அதெல்லாம் சரிப்பட்டு வராது. இது என்ன இன்னும் என்னவோ கூத்து நடக்கும் ஹாஸ்டல்ல" என்றான். ஆர்வம் மேலிட "ம்.. என்னடா?" என்றான் இன்பராஜன்.

"நீ வா நான் சொல்றேன்" என்றபடி பேசிக்கொண்டே ஹாஸ்டலை நோக்கி நடந்தனர். இவர்கள் அறையை அடைந்ததும்

இந்த ராகிங் என்பது எத்தனை நாள் நடைபெறும், எப்பொழுது முற்றுப்பெறும் என்பது முதல் பருவத்தேர்வுகள் (செமஸ்டர்) வரும்வரை கணிக்கவே இயலாது! முதல்நாள் விட்டகுறை இரண்டாம் நாள் எழிலாகத் தொடர்ந்தது! வகுப்புகள் முடிந்து அனைவரும் வெளியே செல்கையில் கல்லூரியின் வெளியே பேருந்து நிறுத்தத்தில் அமர்ந்திருந்தனர் ஐந்தாறு மாணவர்கள். அவர்களில் முதலாவதாய் அமர்ந்திருந்தவனைப் பார்த்ததும் இன்பராஜனுக்குக் கிலி பிடித்தது. கூட்டத்தில் தலைவன் போலக் காட்சியளித்தது முதல்நாள் அளவளாவிய அந்தப் 'பெருந்தலை'யே தான். நேற்றிரவு நிம்மதியாகத் தூங்கினானோ என்னவோ, அவ்வளவு ஆசையோடும் அடக்கமுடியாத வெறியோடும் எதிர்பார்த்திருந்தான்.

இன்பராஜனோடு உடன் வந்த மாணவர்களைப் பொருட்படுத்தாது அவனை அழைத்தது 'தலை'. 'கொஞ்சம் இப்படி வாங்க சார்.. பேசிட்டுப் போலாம்' என்று.

"உங்க பேரு என்ன"? - ஏற்கெனவே கேட்கப்பட்ட அதே கேள்வி!

"இன்பராஜன். நேத்தே சொன்னேனே" என்றான்.

"குறுக்க பேசக்கூடாது! கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்லணும்" என்றான் ஒரு அதிகாரமான தோரணையில்.

"சரி"

"சீனியருக்கு வணக்கம் வைக்க மாட்டியா?"

"வணக்கம்"

"அய்யே.. இதப் பார்ரா. தொரை வணக்கம் வைக்கிற ஸ்டைல.. ஏங்கண்ணு தலைவருக்கு நீங்க இன்னும் இதெல்லாம் சொல்லித் தரலையா?" என்று உடனிருந்த மாணவர்களைக் கேட்டான் கிண்டலாக.

"வணக்கம் அண்ணா" என்று ஐந்து விரல்களையும் ஒன்று சேர்த்து நெற்றியில் வைத்தபடியே சொன்னான்.

"மொதல்ல இந்த அண்ணா, னொன்னா வெல்லாம் வேணாம். நான் என்ன ஒங்கூடப் பொறந்தேனா? ஒழுங்கா சார்னு கூப்பிடு! என்ன?"

"சரிங்க சார். வணக்கம் சார்!" என்றான்.

"ம்.. அது! சரி.. என்ன எனக்கு மட்டும் தானா வணக்கம்? நம்ம தோஸ்துக்களுக்கு இல்லையா?"

"வணக்கம் சார்" வரிசையாக ஒவ்வொருவருக்கும் சொன்னான்.

"சரி.. உங்க ஊருல நீ இப்படித்தான் வணக்கம் வைப்பியா? நம்ம காலேஜ் ஸ்டைல் வணக்கம் எப்படி தெரியுமா? இரு சொல்லித் தர்றேன்" என்ற படியே அவனுடைய முழுக்கைச் சட்டையின் ஒரு கையை மடக்கி விடச்சொன்னான். அதற்கு எதிர்ப்பதமாக கால்ச்சட்டையின் இன்னொரு புறத்தை மடக்கி விடச் சொன்னான்.

கைச்சட்டையில் இடது கையும், கால்சட்டையில் வலது கையும் மடக்கி விடப்பட்டு, காலணிகளைக் கழற்றி அவற்றின் கயிறுகளை ஒன்றோடு ஒன்றாக இணைத்துப் பின் ஜோடிக் காலணிகளையும் தலைக்கு மேல் வைத்த வண்ணம் பேருந்து நிறுத்தத்தில் இருக்கும் அனைவருக்கும் வணக்கம் வைக்கச் சொன்னான்.

(தொடரும்..)

Labels: ,

 
posted by Raghavan alias Saravanan M at 3/06/2008 06:58:00 PM, | 9 பின்னூட்டங்கள்