Friday, November 23, 2007

கனாக் காணும் காலங்கள் - 3

கதையின் முந்தைய பகுதியைப் படிக்க, இங்கே சொடுக்கவும்.

தன் கனவுகளை நோக்கிப் படிப்படியாக முன்னேறிக் கொண்டிருந்தான் இன்பராஜன். எண்ணம் போல் வாழ்க்கை என்பதைப் போல அவனுடைய பிஞ்சு மனத்தின் ஆசைக் கனவுகளுக்கு நல்ல வண்ணம் தீட்டினார்கள் வீட்டிலுள்ளோர் அனைவரும். கேபிள் டிவி முதல் மாதமொரு முறை குடும்பத்தோடு பார்க்கும் திரைப்படம் வரை எல்லாப் பொழுதுபோக்கு அம்சங்களுக்கும் தற்காலிக விடுமுறை விட்டிருந்தார்கள்.

ஜனனிக்கு இன்பராஜனின் கனவுகளின் வீரியம் முழுதாகப் புரிந்திருக்கவில்லை எனினும் தன் வாழ்க்கைக்கேற்ப வளைந்து கொண்டிருக்கிறான் என்பது மட்டும் புரிந்தது. அதனால் சற்றே பெரிய மனுஷித் தோரணையில் பெருந்தன்மையாக நடந்து கொண்டாள் சமர்த்தாக.

இன்பராஜன் கண்ணும் கருத்துமாகப் படித்து நல்லமுறையில் தேர்வுகளை எழுதினான். தேர்வுகள் முடிந்த கையோடு நுழைவுத் தேர்வுகளுக்கும் தயார் செய்தான். எண்ட்ரண்ஸ் எக்ஸாம் என்பது அடுத்த கிலி. இருப்பினும் சலசலக்கவில்லை காரியத்தில் கண்ணாயிருந்த இந்தப் புலி.

அதற்கெனத் தனித் தயாரிப்புக்கள். ஒரு முழு வருஷப் படிப்பையும் சேர்த்து ஓரிரு மாதங்களுக்குள் மீண்டும் படிக்கவேண்டிய நிலை. நன்றாகவே படித்தான்.

"என்னப்பா நல்லாப் படிக்கிறியா? கவனமாப் படி" என்றெல்லாம் நினைவுபடுத்த வேண்டிய கட்டாயத்தில் சுந்தரராஜனும் இல்லை. நினைவுபடுத்தப்பட வேண்டிய சூழ்நிலையில் இன்பராஜனும் இல்லை. குறிக்கோளில் தெளிவாய் இருப்பவனிடம் குறுக்கு விசாரணை எதற்கு?

நுழைவுத் தேர்வுகளும் நல்லமுறையில் எழுதி முடித்தான். போர் முடிந்து தாயகம் திரும்பிய வீரனாய் நிம்மதிப் பெருமூச்சு விட வேண்டிய நேரத்திலும் பரீட்சை முடிவுகள் நல்லவிதமாய் வரவேண்டும் என்ற சற்றே பயம் கலந்த நம்பிக்கை அவனுக்குள் பலவாறாய்க் கூட்டணி நடத்தியது.

முடிவுகளை எடுக்கும் திறன் தனக்கு இல்லை எனினும் எல்லாம் நல்ல படியாக நடக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சோவாரிப் பிள்ளையார் கோவிலுக்குச் சென்றான். பிள்ளையாரிடம் மனமுருக வேண்டிக்கொண்டு அர்ச்சகரிடம் சற்றே பேசிவிட்டு வீடு வந்து சேர்ந்தான்.

பரீட்சை முடிவுகள் நல்ல விதமாய் வந்தன. அவன் எதிர்பார்த்திருந்த படியே 1150க்கு மேல் எடுத்திருந்தான். சந்தோஷம். இதுகாறும் அவன் உழைத்த உழைப்பிற்குத் தக்க ஊதியம். கைமேல் பலன். மொத்த வீடும் குதூகலத்தில் திளைத்தது.

லட்சுமி அம்மாள் ஆசையாக மகனை உச்சி மோந்து நெற்றியில் ஆதுரத்தோடு முத்தமிட்டார். எத்துணை முத்தங்கள் இருந்தாலும் உச்சந்தலையில் இடும் அந்த ஒற்றை முத்தத்திற்கு ஈடாகுமா? தாய்மையின் நேசத்தினை உள்ளுணர்ந்தான் இன்பராஜன். அம்மாவிடம் இருந்து கிடைக்கும் அளப்பரிய பரிசு அது!

சுந்தரராஜன் எப்பொழுதும் போல "ரொம்ப சந்தோஷம்பா! உன் திறமைக்கும், விடாமுயற்சிக்கும் நல்ல பலன் கெடைச்சிருக்கு. நினைச்சதை சாதிச்சுட்டே" என்று சிரித்தபடியே தோளில் தட்டிக் கொடுத்தார். "ஆசீர்வாதம் பண்ணுங்கப்பா" என்று அவர் காலில் விழுந்து நமஸ்கரித்தான்.

"டேய் அண்ணா.. கலக்கிட்டடா.. கங்கிராட்ஸ்" என்ற படியே ஓடி வந்து கைகொடுத்தாள் ஜனனி.. "தாங்க்ஸ் டா ஜனனிக்குட்டி" என்று சிரித்தபடியே சிலாகித்தான் இன்பராஜன்.

பாதிக் கிணறு தாண்டியாயிற்று. மீதிக் கிணறு? நுழைவுத் தேர்வு முடிவுகளும் இவன் விருப்பங்களுக்கு ஏற்றவாறு நடக்க வேண்டுமே!

அன்று மாலை நேரம் சற்றே ஓய்வாக ரேடியோ கேட்கலாம் என்று எண்ணி, வானொலிப் பெட்டியில் இலங்கை வானொலிக்கான அலைவரிசைக்கு டியூன் செய்தான். BH அப்துல் ஹமீது தன் கவர்ச்சிக் குரலில் களேபரம் பண்ணிக் கொண்டிருந்தார் வழக்கம் போல. "மதுரையில் இருந்து நேயர் கதிரேசன் அவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க இதோ இந்தப் பாடல்" என்றதைத் தொடர்ந்து அந்தப் பாடல் ஒலிபரப்பானது.

"நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை..."

(தொடரும்..)

Labels: ,

 
posted by Raghavan alias Saravanan M at 11/23/2007 04:29:00 AM, | 10 பின்னூட்டங்கள்
Thursday, November 15, 2007

கனாக் காணும் காலங்கள் - 2

கதையின் முந்தைய பகுதியைப் படிக்க, இங்கே சுட்டவும்.

வீடு வந்து சேர்ந்த இன்பராஜன் அம்மாவிடம் எப்பொழுதும் போலப் பிரசாதத்தைக் கொடுத்துவிட்டு, "கோவில்ல நல்ல கூட்டம்மா இன்னைக்கு" என்று சொல்லி அடுக்களைக் கதவருகே அமர்ந்தான். "ஆமாம்பா.. நல்ல நாள் பெரிய நாள்ல கூட்டம் இருக்கத்தான் செய்யும்.. " என்று சொல்லி, அடுப்பில் இருந்த பணியாரச்சட்டியைக் கவனித்தார் இன்பராஜனின் அம்மா லட்சுமி. அவரைப் பொறுத்த வரை "அடுப்படியே திருப்பதி, ஆம்பிளையானே தெய்வம்" என்று வாழ்பவர். எனினும் குளித்துவிட்டுத் தினமும் காமாட்சி விளக்கின் முன் ஒரு பத்து நிமிடம் கண்டிப்பாய்ச் செலவழிப்பார். அவருடைய மனமார்ந்த பிரார்த்தனை நேரம் பெரும்பாலும் அவ்வளவே.

"அம்மா, அப்பா எங்கேம்மா?" என்று கேட்டுக் கொண்டே வந்தாள் ஜனனி. இன்பராஜனின் தங்கை. கடைக்குட்டி என்பதால் செல்லம்! கேட்கவே வேண்டாம். தீபாவளி என்பதால் அவளுடைய கொள்கைக்கு விரோதமாகப் பாதித் தூக்கத்தில் எழுப்பி விடப்பட்டாள் ஆறு மணிக்கெல்லாம். இருப்பினும் முடிந்த அளவு கிடைக்கின்ற இடைவெளிகளில் எல்லாம் ஒரு சிறு துயில் கொண்டது அந்தப் பூங்குயில்.

"ஸ்கூல் இருந்தாத் தான் சீக்கிரமே எந்திரிச்சுக் குளிச்சுக் கெளம்பணும். இன்னைக்குத் தான் அவங்களே ஜாலியா லீவு விட்டுட்டாங்கள்ல.. என்னடா அண்ணா?" என்று காலையிலேயே ஒரு கச்சேரியை ஆரம்பித்திருந்தாள். எப்பொழுதும் சரிக்குச் சரி மல்லுக்கு நிற்கும் இன்பராஜன் இன்று நின்றால் பல்லு எகிறும் என்று பயந்து, "ஆமாடா வாலு! நீ சொன்னா சரித்தான் பாட்டிம்மா. எட்டாம் வகுப்புலயே என்னம்மா வேதாந்தம் பேசுற..சீக்கிரம் குளிச்சு ரெடியாகு.." என்று ஒத்து ஊதிவிட்டுக் கோயிலுக்குக் கிளம்பியிருந்தான். இப்பொழுது அப்பாவைக் கேட்டு வந்தவள் எங்கே பாதியில் விட்டுச் சென்ற கச்சேரிக்கு மீண்டும் சுதி சேர்ப்பாளோ என்று நினைத்தவனாய், "அப்பா இந்நேரம் பூஜையை முடித்திருக்கணுமே" என்று ஒரு நக்கல் சிரிப்புச் சிரித்தான்.

"அப்படின்னா நான் இந்நேரம் பாத்ரூமுக்குள்ளே இருந்திருக்கணுமே" என்று விருட்டென்று ஓடினாள் ஜனனி.. செல்லம் கொடுக்க வேண்டிய இடத்தில் செல்லமும், கண்டிப்பாய் இருக்க வேண்டிய தருணங்களில் தேவையான கண்டிப்புமாய் சரியான விதத்தில் தன் பிள்ளைகளை வளர்ப்பதில் ஒரு பெருமிதம் கொண்ட தகப்பனாய் வலம் வந்தார் சுந்தரராஜன்.

பூஜையைப் பொறுத்தமட்டில் அம்மா லட்சுமிக்கு எதிர்ப்பதம் அப்பா சுந்தர்ராஜன். சாதாரண நாட்களிலேயே தினமும் குறைந்தது ஒரு மணி நேரமாவது பூஜை செய்பவர் இன்றைக்குத் தீபாவளி என்பதால் சற்றே கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டார். அம்மா அடுப்படியிலிருந்து கொடுத்து அனுப்பிய பலகாரங்களாகட்டும், அவர் வரும்போதே கொண்டு வந்திருந்த புதுத் துணிகளாகட்டும், பூஜைக்குத் தேவையான தேங்காய், பழங்களாகட்டும் அத்தனையும் ஸ்லோகங்களையும், சாமி பாட்டுக்களையும் சொல்லிக் கொண்டே அழகாய் அடுக்கி வைத்துக் கொண்டிருந்தார். கணிப்பொறி படிக்காமலேயே Parallel Processing, Multi tasking களில் கைதேர்ந்த வித்தகர்.

"பச்சை மரகதத் திருமேனி
பைந்தமிழ்க் கூடல் மகராணி
அச்சம் களையும் தேனாட்சி
அன்பாய்ச் செய்யும் மீனாட்சி
உச்சிக் கருணை உன்பாதம்
உருகித் தொழுதால் அதுபோதும்
மெச்சும் நிலைமை உருவாகும்
மேன்மைச் சுகங்கள் விளைவாகும்"

என்ற வரிகளைக் கேட்டபடியே உள்ளே சாமி வீட்டினுள் நுழைந்த இன்பராஜன் தானும் அப்பாவுடன் சேர்ந்து கொண்டான். கூட மாட வேலை செஞ்சாத்தானே சீக்கிரம் ரெடியாகிப் புதுத்துணி உடுத்திப் பட்டாசு வெடிக்கலாம் என்ற ஆசை அவனுக்குள்.

+2 முடிச்சு அடுத்த வருஷம் வெளியூருக்குப் படிக்கப் போற மாதிரி வந்தா, லீவு கெடைக்குமோ கெடைக்காதோன்னு அவனுக்குள் அந்த வயசுக்குண்டான ஒரு எதிர்பார்ப்பு, ஆசை, கனவு எல்லாமே கலந்து கதகளி ஆடின.

ஒரு வழியாக ஜனனி இன்று மற்றவர் நலன் கருதி ஒரு பொது நலத் தொண்டாற்றினாள். ஆம் சீக்கிரமாகக் குளித்து முடித்தாள். அம்மாவும் பலகாரங்கள், காலைச் சிற்றுண்டி எல்லாம் செய்து முடித்து அனைவரும் பூஜை அறையில் ஆஜராயினர்.

அப்பா எல்லாத்துணிகளுக்கும் மஞ்சள் வைத்து முடிக்கவும், அம்மா விளக்கேற்றவும் எல்லோரும் சாமி கும்பிட, அப்பா எல்லோருக்கும் துணிகளை எடுத்துக் கொடுக்க இன்பராஜனும், ஜனனியும் பெற்றோர்கள் கால்களில் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து, துணிகளைப் பெற்றுக் கொண்ட நேரம் தான் அவர்களைப் பொறுத்த வரை தீபாவளி பிறந்த நேரம்!

ஒரே ஓட்டமாக ஓடி, அவசர அவசரமாய்ப் புத்தாடை உடுத்திப் பட்டாசுகளை வெடிக்க ஆயத்தமானார்கள் அண்ணன் தங்கை இருவரும்!

"ஏய் வாலு! உன் டிபார்ட்மெண்ட் நைட்ட்டு தான். மிஸ்டர். கம்பி மத்தாப்பு, மிஸ். புஸ்வாணம் எல்லாமே உனக்காக .. எல்லாம் உனக்காக" என்ற சந்திரபாபு ஸ்டைலில் பாடினான்.

"போடா லூசு! அது போன வருஷம்.. இந்த வருஷம் நான் அணுகுண்டு வைப்பேனாக்கும்" என்ற படி பங்குக்கு இவளும் வம்பிழுத்தாள்.

"ஆத்தாடி, வாயிலயே அணுகுண்டை வச்சிட்டியே இப்ப..சரி சரி.. பாக்கறவங்க பயந்துரப் போறாங்க.. அண்ணன் முதல்ல சரம் வைப்பேனாம்.. ஜனனிக்குட்டி ஒழுங்கா சுவரோரமா வழக்கம் போல பயந்துக்கிட்டே வேடிக்கை பாப்பியாம்.. என்ன?" என்று வெடியோடு ஓடினான் வெளியே.

"அம்மா.. இந்த அண்ணாவைப் பாரேன்... எனக்கு வெடியே தரமாட்டேங்கிறான்..." என்று வீம்புக்கு அம்மாவிடம் புகார் செய்ய ஓடினாள்.

அவ்வப்பொழுது வம்புக்கு இழுத்து, சீண்டி அது ஒரு சிறு சண்டையில் முடிந்து அப்பா,அம்மா பஞ்சாயத்து செய்வதில் இருக்கிற சுகம்.. அப்பப்பா.. ஆயுசுக்கும் இருக்கும் அந்தச் சிறு வயதுச் சிலிர்ப்புகள்.

சண்டைகள் சமாதானமாகி எல்லோரும் சாப்பிட்டு முடித்த பின் இன்பராஜன் டியூஷனுக்குக் கிளம்பினான். தீபாவளி, பொங்கல் இதற்கெல்லாம் விடுமுறை எடுக்கிற வருஷமா அது? அவரவர் வாழ்க்கையை நிர்மாணிக்கும் வருடம் அல்லவா? அதனால் டியூஷன் மாஸ்டர் சொன்னதற்கிணங்க மாணவர்களும் தத்தம் வாழ்க்கைப் பாதைக்காகத் தங்களை வார்க்கத் தயாரானார்கள்.

அறிந்தும் அறியாமலும், புரிந்தும் புரியாமலும் பொட்டை மனப்பாடம் செய்து தட்டி உருட்டி மென்று விழுங்கிப் பரீட்சையில் அப்படியே துப்பி மார்க் வாங்கும் கட்டாயம் வரக்கூடாது என்பதில் இன்பராஜன் கவனமாய் இருந்தான். அதனால் சற்றே தனக்கான பொழுதுபோக்கு அம்சங்களைத் தளர்த்தி முழுமனதோடு படித்தான்.

எதிர்பார்த்த மதிப்பெண்கள் வாங்க வேண்டும், எதிர்பார்த்த கல்லூரியில் இடம் கிடைக்க வேண்டும் என்று சற்றே பயம் கலந்த குழப்பம் இருந்தாலும், அவற்றை எல்லாம் தற்காலிகமாய் மூட்டை கட்டி வைப்பதே சிறந்தது என்பதை நன்கறிந்திருந்தான் இன்பராஜன்.

மகனின் கனவுகளை நனவாக்குவதில் தந்தைக்கும் பங்கு உண்டல்லவா? அவன் தன் பங்குக்கு அறிவைச் சேர்க்க, இவர் தன் பங்குக்குப் பணத்தைச் சேமிக்க ஆரம்பித்திருந்தார். மாணவர்களுக்கு மட்டுமல்லாது நடுத்தர வர்க்கப் பெற்றோர்களுக்கும் அல்லவா பன்னிரண்டாம் வகுப்பு ஒரு நல்ல பரீட்சை வைக்கிறது.

ஒவ்வொருவர் வாழ்விலும் நிச்சயமாய்க் கனவுகள் இருக்கும். கனவுகள் நிறைவேற உழைப்புடன் கூடிய பிரார்த்தனைகளும் இருக்கும்.

தந்தை மகற்காற்றும் உதவியும், மகன் தந்தைக்காற்றும் உதவியும் செவ்வனே முடிந்தால் சிறப்பாய்த் தான் இருக்கும்...


(தொடரும்).....


பின்குறிப்பு: "பச்சை மரகதத் திருமேனி" பாடலை இயற்றியது என் தந்தை "சிவநெறிக்கவிஞர் திரு. இராகவன் முத்து". என் தலையாய ஆசானுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் இங்கே!

Labels: ,

 
posted by Raghavan alias Saravanan M at 11/15/2007 02:34:00 PM, | 12 பின்னூட்டங்கள்
Thursday, November 08, 2007

கனாக் காணும் காலங்கள் - 1

கதையின் முன்னுரையாய் என்னுரை இங்கே.


"விநாயகனே வினை தீர்ப்பவனே
வேழ முகத்தோனே ஞால முதல்வனே
விநாயகனே வினை தீர்ப்பவனே"


கணீரென்று ஒலித்த சீர்காழியின் குரல் அதிகாலை வேளையில் அங்கிருந்த 'சோவாரிப் பிள்ளையார்' கோவிலையும் அதன் சுற்றுப்புறத்தையும் மேலும் சுறுசுறுப்பாக்கியிருந்தது! காரைக்குடியில் எத்தனையோ கோவில்கள் இருந்தாலும் இந்தச் சோவாரிப் பிள்ளையாருக்குத் தனிப் பெருமை தான்.

தீபாவளித் திருநாளை முன்னிட்டு மக்கள் வெள்ளம் அலைமோதியது கோவிலில். அர்ச்சகர் தன் பணியைச் செவ்வனே செய்து கொண்டிருந்தார். அவரைப் பொறுத்த மட்டிலும் எல்லா நாளையும் போலவே இதுவும் ஒரு நாள். ஏனெனில் அவர் கடன் பணி செய்து கிடப்பதே! தீபாவளி அன்றாவது தரிசிக்க வரும் பக்தர்களைப் போலல்லாது, எல்லா நாளும் அவர் பிள்ளையாருடன் மிக இணக்கமாய்ப் பேசுபவராயிற்றே.

தினசரி வரவியலாத போதிலும் கண்டிப்பாக அடிக்கொரு தரம் வந்து அமைதியாகவும், மிக ஆழமாகவும் வணங்கி விட்டுச் செல்லும் இன்பராஜன் அன்றும் அவர் கண்ணில் தென்பட்டான். சரி அவனுடைய முறை வரும் போது பேசிக் கொள்ளலாம் என்று ஆரத்தித் தட்டை அதற்குரிய இடத்தில் வைத்து, தட்டின் மேலிருந்த கிண்ணத்தில் இருந்து விபூதி வழங்க ஆரம்பித்தார் அர்ச்சகர்.

காற்றில் கரைந்த கானமும், கற்பூரத்தின் மணமும், விபூதியின் சுகந்தமும் அனைவரையும் ஒரு பரவச நிலையில் ஆழ்த்தியிருக்க, தன் முறை வந்ததும் தன் வழக்கமான புன்னகை ஒன்றையும் காணிக்கையாக உதிர்த்தான் இன்பராஜன்.

"என்ன தம்பி நல்லா இருக்கீங்களா? கொஞ்ச நாளாச்சே பாத்து" என்று அக்கறையுடன் விசாரித்தார் அர்ச்சகர்.

பிள்ளையாருடன் மனதால் பேசி முடித்த இன்பராஜன், அர்ச்சகரிடம் வாயால் பேசினான். "நல்லா இருக்கேன் சாமி.. ஆமா கொஞ்ச நாளா மாமா வீட்டுக்குப் போயிருந்தேன் லீவுங்கிறதால.. நீங்க நல்லா இருக்கீங்களா?" என்று வழக்கமான குசலம் விசாரிப்பினை முடித்து விட்டு, "இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்" என்று சொல்லி பிள்ளையாருக்கு மூன்று தோப்புக்கரணங்களைப் போட்டு முடித்தான்.

"சந்தோஷம். நன்றி தம்பி. உங்களுக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். தம்பி அடுத்தாப்புல என்ன பண்றதா உத்தேசம்?" என்று கேட்டார்.

"ஆமாம் சாமி! இந்த வருஷம் பிளஸ் டூ முடியுது. அடுத்தாப்புல MBBS படிக்கலாம்னு இருக்கேன்" என்று சொல்லி விட்டு "நான் வர்றேங்க" என்ற படி பிரகாரம் சுற்றப் போனான்.

"ரொம்ப நல்லது தம்பி! ஆண்டவன் அனுக்கிரஹம் உங்களுக்கு எப்பவும் இருக்கட்டும். நல்லாப் படிங்க தம்பி! வீட்டுல அப்பா,அம்மாவைக் கேட்டதா சொல்லுங்க" என்று கூறி விட்டு வரிசையில் நின்றிருந்த அடுத்த பக்தருக்கு ஏதுவாக ஆரத்தியில் ஒரு கற்பூரத்தை எடுத்துப் போட்டார்.

அத்தனையும் கேட்டுக் கொண்டிருந்த பிள்ளையார் அவர் பங்குக்கு ஒரு புன்னகையைப் பிரசாதமாகத் தவழ விட்டார்.

சில சமயங்களில் வார்த்தைகளுக்கே அர்த்தம் விளங்காத பொழுது, புன்னகை மட்டும் என்ன விதிவிலக்கா?

ஒன்றுமே இல்லாதது போல் தோன்றும் அந்த ஒற்றைப் புன்னகையில் தான் எத்தனை எத்தனை அர்த்தங்கள் பொதிந்துள்ளன!

போகப் போகப் புரியும் புன்னகையின் புனிதம்....

(தொடரும்....)

Labels: , ,

 
posted by Raghavan alias Saravanan M at 11/08/2007 09:18:00 PM, | 19 பின்னூட்டங்கள்

கனாக் காணும் காலங்கள் - முன்னுரை

கனாக் காணும் காலங்கள் - இது தாங்க நான் புதுசா எழுதப் போற கதையோட தலைப்பு!

என்னடா 'கவிதை கேளுங்கள்' ன்னு வலைப்பூ வைச்சிக்கிட்டு, 'கதை கேளு' ன்றானேன்னு பாக்குறீங்களா? நானும் யோசிச்சேன் அதையே தான். இதுனால தான் ஏற்கெனவே சில நண்பர்கள் அழைத்த தொடர்/சங்கிலிப் பதிவுக்குக் கூட இந்த வலைப்பூவைப் பயன்படுத்தாம, வேற ஒண்ணுல எழுதினேன்.

இப்போ கூட, 'கதை கேளுங்கள்' ன்னு ஒண்ணு ஆரம்பிக்கலாமான்னு ஒரு ரோசனை! ஆனா, கண்டிப்பா காறித்துப்பிருவீகன்னு ஒரு சந்தேகந்தேன்!

இருக்காதா பின்னே? ஆடு குட்டி போட்ட கணக்கா ஏற்கெனவே ஒரு ஏழெட்டு வலைப்பூ இருக்கு! இதுல இன்னொண்ணா? 'நாடு தாங்காது சாமி'ன்னு நானே ஒரு முடிவெடுத்து இதுலயே களமிறங்கலாம்னு இந்த இனிய தீபாவளித் திருநாளில் மங்கலகரமாப் பிள்ளையார் சுழி போடறேன்...

ஒங்க நல்லாதரவு மற்றும் ஆசீர்வாதத்தோட....

தோழமையுடன்,
இராகவன் என்ற சரவணன் மு.

Labels: , ,

 
posted by Raghavan alias Saravanan M at 11/08/2007 08:44:00 PM, | 2 பின்னூட்டங்கள்
Tuesday, November 06, 2007

தீபாவளி சிறப்புக் கவிதைகள்


வரப்போகிற பண்டிகைக்காகப்
புத்தாடைகள் வாங்கவேண்டுமென்று
உன்னொருத்தியை மட்டுமே
உடனழைத்துச் சென்ற வேளைதனில்,
உனக்குள்ளிருந்த பசி உறுத்துவாட்ட
உணவுவகைகளைச் சலித்தெடுப்பதில்
செலவானது மொத்த நேரமும்.

பிற்பொழுது வரும் இன்பத்தை விடவும்
தற்பொழுது துய்க்கும் சுகங்கள் வலிமையானவை!

சேர்ந்தே இருக்கட்டும்
பண்டிகையும், பசியும்!

*

ஏனையோர்க்கு எப்பொழுது
வருகிறது தீபாவளி என்று
எனக்குத் தெரியாது!

என்னைப் பொறுத்தவரை
உன் புன்னகைச் சூறாவளி
உரசிச் சென்ற மறுகணமே
விழித்துக் கொண்டது என் தீபாவளி!

நீ மனசுக்குள் உட்கார்ந்து
மணியடிக்கிறாயா?
மத்தாப்பு வைக்கிறாயா?

*

தினம் தினம் பட்டாசாகும் எனக்கு
தீபாவளியில் மட்டும் என்ன சிறப்பு?

புரிந்தும் புரியாதது போலவே
என்னடி அது ஒய்யாரச் சிரிப்பு?

தீபாவளி சிறப்புச் சிரிப்போ?

*

சிக்கிமுக்கிக் கல்லுக்கு
சாப விமோசனம்
கொடுத்த சாகசக்காரி நீ!

என்னைச் சமைக்க,
என்னையே பற்ற வைக்கிறாய் நீ!
எண்ணையும் திரியும்
தீக்குச்சியும் இல்லாமலேயே!

நீ பற்ற வைக்கின்றாயா?
பற்றிக் கொள்ள வைக்கின்றாயா?

*

'பற்றிக் கொள்ளும்
திறன் இருப்பவர்கள்
மட்டும் இங்கே பட்டாசு வாங்கவும்'

இப்படியாய் எழுதத் தோன்றியது
உன் அப்பாவின் வெடிக்கடையில்
நீ சிரித்துக்கொண்டே நிற்கும்
அழகைப் பார்த்ததும்!

*

தீபாவளிக்கு 'கங்கா ஸ்நானம்'
செய்ய வேண்டுமாமே!

சரி சரி.. அதிகாலையில்
வழக்கம் போல என்னை உன்
கண்களால் குளிப்பாட்டு!

உன் கண்களுக்குத் தெரியாதா
என்ன கங்கையின் புனிதத்தைத்
தன் வழியாய் உணர்த்த?

*

வீட்டிலுள்ள எல்லோரும்
தமக்குப் பிடித்த பட்டாசுகளைப்
பங்குபோட்டுப் பிரித்தெடுக்கையில்
நான் மட்டும் இலையில் ஒட்டிய
பனித்துளியாய் நின்றதைப் பார்த்ததும்
அனைவருக்கும் ஆச்சரியம்!

என் மொத்தக் கடையையும்
கொளுத்திப் போடும் ஒரு
ஒற்றைத் தீக்குச்சியை நீ
உன் உதட்டில் வைத்திருப்பது
புரிந்த பின் பிறகென்ன செய்வதாம்!

போருக்குப் பின் அமைதி
என்பது தானே நியதி?

ஆனால் என் வழியில்
போருக்கு முன்னும் அமைதி!

*

தினம் தினம் தீபாவளி
உன் கண்களின் மின்னல் வாயிலாய்,

தித்திக்கும் பொங்கல்
உன் இதழ்க்கடைச் சிரிப்பினூடே,

பொசுக்கிடும் போகி
உன் கவலைகரைக்கும் கனிவில்

எனக்கான பஞ்சாங்கம்
உன்னைச் சுற்றி உலாவுகிறது!

வருடமொரு முறை
வரும் பண்டிகைக்காக
என்னை ஏங்கவே விட்டதில்லை நீ!

*

பழமொழிகளைப் பொய்யாக்குவது
உனக்குப் புதிதல்ல எனினும்
பண்டிகைகளைக் கூடவா நீ
விட்டு வைப்பதில்லை?

வருடப்பிறப்பைப் பொய்யாக்கி,
நாட்பிறப்பை அறிமுகப்படுத்தும் விதமாய்
ஒவ்வொரு நாளும புதிதாய்
உன் அதிகாலை தரிசனம்!

*

அனைவருக்கும் என் இதயங்கனிந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

Labels: , ,

 
posted by Raghavan alias Saravanan M at 11/06/2007 03:27:00 PM, | 10 பின்னூட்டங்கள்