Wednesday, August 29, 2007

கோபத்தின் வெளிப்பாடு


உனக்கு நான் என்ன
தீங்கு இழைத்தேன் இதுவரை?

புரட்டிப் பார்த்ததில் புத்தி
சுத்திக்கொண்டதே மிச்சம்!

ஏதேனும் மனக்குமுறல் இருந்தால்
பேசித் தீர்த்திருக்கலாமே?

நல்ல இடைத்தரகர்கள்
கிடைப்பது அரிது என்பதனால் தான்
இடிபோல இறக்கினாயோ உன்
கோபக் கனல்களை?

இதைக் கோபம் என்பதா?
கொலைவெறி என்பதா?

என் பொறுமையின் உச்சபட்ச
விளிம்பின் உயரம் தொடவைத்த
பின்னும் ஏனிந்த உக்கிரம்?

உன்னைப் போல் என்னால்
நினைத்த நேரத்தில்
பழிதீர்க்க முடியாது
என்ற பகட்டா?

ஏதோ ஆரம்பித்தாய்
சற்றே தளர்ந்திடுவாய் என்று
சலியாத நம்பிக்கையுடன் இருந்தேன்

என் முரட்டு நம்பிக்கையும்
குருட்டு நம்பிக்கையானது
குறுகிய கால அளவில்!

யார் மீது கோபம் உனக்கு?
அதைச் சொல்லிவிட்டுத் துவக்கு
அடுத்த ஆட்டத்தையாவது!

எதிராளிகள் களைப்படைவது பற்றிக்
கவலையே கொள்ளாத போராளியா நீ?

நிராயுதபாணியாக நின்றாலும்
நிறுத்தி யோசிக்க இயலாத நீசனா நீ?

விதிமுறைகளே படிக்காத உன்னிடம்
வரைமுறைகளை எதிர்பார்ப்பது தகுமா?

ஜாதி வேறுபாடுகள் பார்ப்பதில்
சமர்த்தனானாயோ?  மேல் ஜாதிக்காரன் நீ
என்பதனால் வந்த மெத்தனமா இது?

எதிர்ப்பின் எல்லை கடந்தால்
வெள்ளமாய்க் கொட்டுகிறாய்.

அளவு கடந்த பாசமா?
அடக்க முடியாத துவேஷமா?

உணர்ச்சிகளை வடிகட்டுதல் கடினம்.
உணர்வுகளைக் கூடவா நெறிப்படுத்த
இயலாது உன்னால்?

உன் ஊமைக் கோபத்திற்கு ஆளாகி
ஊமையாய் நின்ற போதிலும்
உள்ளம் இரங்கவில்லையே நீ?

யார்மீதோ கொண்டிருந்த கிலேசத்தை
என் மீது நீ அவிழ்த்தது போல்
நானும் காட்டவா உன்மேல் இருக்கும்
வெளியிடமுடியாத வெறுப்பை?

உனக்கிருக்கும் வீரியமும், வெறியும்
எனக்கும் இருக்கும் என ஏன்
எண்ண மறுக்கிறாய்?

என்ன தான் ஏசினாலும்,
உன் தாக்குதலால் கட்டுண்டு,
பார்ப்பவர்களிடம் நான் கூறும்
ஒற்றை வரியிலான பதில்.

"சர்வம் வருணார்ப்பணம்".

Labels: ,

 
posted by Raghavan alias Saravanan M at 8/29/2007 10:56:00 PM, | 9 பின்னூட்டங்கள்
Friday, August 24, 2007

என் பயணங்கள்

இதுவரை நான் சந்தித்திராத
வாழ்வின் புதிய திருப்பங்கள்.

தாமதமாகி விட்ட தருணங்களில்
எல்லாம் தன்னிச்சையாய் ஒரு தயக்கம்!

முன்னே கடந்து சென்றவரோ,
பின்னே கடக்கப் போகிறவரோ
ஏறிட்டுப் பார்க்க வேண்டுமே என்ற தவம்.

என்றாவது இப்படி நடக்காதா
என ஏங்கிய கனவுகளின் நிஜம்.

சந்தர்ப்பங்கள் வாய்க்காததால்
சவுக்கியங்களை இழந்ததற்காய்
சங்கடப்பட்ட சமயங்கள் ஏராளம்!

தனிமையிலும் இனிமை காண
முடியும் எனும் அனுபவ உண்மை!

எனக்குள்ளும் இருந்த ஆளுமை
உணர்வினைத் தட்டி எழுப்பிய தன்மை.

தலைவாரிப் பூச்சூட்டினால் மட்டும்
தடங்கல்களைத் தவிர்க்கவியலாது என்று
தயக்கமற உணர்ந்து உனக்கான
உணர்வுகளை இனங்காணும் புதுப்பயிற்சி!

சட்டென்று உற்பத்தியாகும் உணர்வுகளுக்கு
சலிக்காமல் பயன்படும் வடிகால்!

தனியாகவே இதுவரை நடந்து
பழகிவிட்ட எனக்கு இந்தப்
புது உறவு புத்துணர்வை அளிக்கிறது!

கண்முன்னே நீண்டு விரியும்
பாதைகள் இப்பொழுதெல்லாம்
தூரத்துச் சொந்தங்களாய்க் கண்டவுடன்
களிப்பாய்க் குசலம் விசாரிக்கின்றன!

தினந்தோறும் தரிசித்தாலும்
திடீர்ச் சுயநலவாதியாய்
மீண்டும் தேவை வரும்வரை
திரும்பிக் கூடப் பார்ப்பதில்லை நான்!

தனியாகவே சென்றாலும்
தனித்திருப்பதில்லை தோழனே!

உற்றதோழனாய் உருக்கொண்ட
என் மோட்டார் சைக்கிளே!

நானாய்க் கேட்டேனோ,
நீயாய் உணர்ந்தாயோ
நீயின்றி இன்றைய என் நிலை
கேள்விக்குறி மட்டுமல்ல..
கேலிக்குறியும் கூட!!

ஆரம்பகாலப் பிழைகளை
அன்போடு பொறுத்தருளி எனக்கு
இருசக்கர வாகனப் பயிற்சியளித்த
பட்டம் வாங்காமல் ஆசானாகி விட்ட
இனிய நண்பனே!

உனக்கு என் உளமார்ந்த
கோடானுகோடி நன்றிகள்.

நான் மேற்கொள்ளும் அனைத்து
இருசக்கர வாகனப் பயணங்களும்
உனக்கே சமர்ப்பணம்!


குறிப்பு: எனக்கு இருசக்கர மோட்டார் வாகனப் பயிற்சியளித்த (Bike) என் நண்பர்கள் திரு. நாராயணன், திரு. தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு இந்தக் கவிதை சமர்ப்பணம்.

நாராயணன் ‍= என் வகுப்புத்தோழன். (BE IT classmate)
தமிழ்ச்செல்வன் = என் கல்லூரித்தோழன் (BE CSE but same batch)

நாராயணன் முதன்முதலில் அவருடைய புது வண்டியில் சொல்லித் தந்தார் (Nov 2005) ல். ஆனால் நான் அதனைத் தொடரவில்லை. எனவே மீண்டும் தடங்கல் வந்துவிட்டது. பிறகு தமிழ்ச்செல்வன் (அவர் திருவனந்தபுரத்தில் இருந்து பெங்களூருக்கு வந்து புது அலுவலகத்தில் சேர்ந்திருந்தார்) என் வேண்டுகோளுக்கிணங்கப் பயிற்றுவித்தார்.

இதனால் நான் அடைந்த, அடைகின்ற பயன்கள் ஏராளம். அதனால், ஒரு நன்றிக் காணிக்கையாய் இந்தக் கவிதை. வெகு நாட்களாய் எழுதவேண்டும் என்று நினைத்திருந்து, நேரமின்மையால் இப்பொழுது எழுதி வலைப்பூவிலும் ஏற்றி விட்டேன்.

ம‌ன‌மார்ந்த‌ நன்றி தோழர்களே!


Labels: ,

 
posted by Raghavan alias Saravanan M at 8/24/2007 07:12:00 PM, | 6 பின்னூட்டங்கள்
Thursday, August 23, 2007

தபூசங்கரின் 'கருப்புப்பெட்டி'


ரயில் பயணங்களின் போது...
வீட்டு ஜன்னல்களின் வழியே
கையசைக்கும் குழந்தைகளுக்கு
பதில் கையசைக்கும் கைகள் எனக்கில்லை
*

திட்டமிட்டு யாரையும் ஏமாற்றுகிற துணிவு
என்னகில்லையென்றாலும்
ஏதாவத்டு உணவகத்திலோ
மருந்தகத்திலோ
கொடுத்த பணத்தைவிட அதிகமாக தந்தால்
பேசாமல் வாங்கி வருபவனில்
நானும் ஒருவனே

*

எப்படியேனும்
எல்லோரிடமிருந்தும் தப்பித்து
வீடு வந்து கண்மூடினால்
என்னிடம் மாட்டிக் கொள்கிறேன்

*

நாள் முழுவதும் கூந்தலிலிருந்த பூவை
எந்தச் சலனமுமின்றி
எடுத்தெரிந்துவிட்டு
வேறு பூவைச் சூடிக் கொள்ள
எப்படி முடிகிறது
இந்தப் பெண்களால்

*

அவ்வளவு தொலைவிலிருந்து
குழந்தைகள் சாப்பிட உதவும்
நிலவில்
மனிதன் உயிர் வாழமுடியாது என்பதை
எப்படி நம்புவது?

*

'அ'-வுக்கு முந்தி எழுத்துக்கள் இல்லையெனினும்
'அ'- எழுதப் பழகிய என் கிறுக்கல்களெல்லாம்
'அ'-வுக்கு முந்திய எழுத்துக்களே

*

நான் யாரைப் பார்க்கப் போனாலும்
அவர் தனிமையில் இருந்துவிடக்கூடாதே
என்கிற பயம் எனக்கு
தனிமை
கலைக்கப்படுகிறபோது
ஏற்படும் இழப்புகளை
நான் அறிவேன்!
 
 
நன்றி திரு. கார்த்திக்பிரபு (http://gkpstar.googlepages.com)

Labels: ,

 
posted by Raghavan alias Saravanan M at 8/23/2007 05:28:00 PM, | 4 பின்னூட்டங்கள்
Tuesday, August 21, 2007

நூறு ரூபாய்

அம்மா ஆசையாய்க் கொடுத்ததோ?
 
அப்பா ஆசிர்வதித்துக் கொடுத்ததோ?
 
பிரிவுநாளின் நினைவாய்ப்
பிரியமாய்த் தோழன் விட்டுச்சென்றதோ?
 
"எதுவேண்டுமானாலும் வாங்கிக்கோ" என்று
தாத்தா பாட்டி சேர்ந்து கொடுத்ததோ?
 
பிறந்தநாள் பரிசு வாங்க மறந்ததற்காய்
"என் நினைவாய் எப்பொழுதுமே வைத்திரு" என்று
தோழியொருத்தி அவசரமாய்த் திணித்ததோ?
 
எல்லோர் பெயரும் இருக்கவேண்டும் என்று
எல்லோரும் ஒன்றாய் இருந்த வேளையில்
நட்பு வட்டாரங்கள் கூடிக் கையொப்பமிட்டதோ?
 
முதல் மாச சம்பளத்தின் அடையாள மிச்சமோ?
 
அவசரத்தேவைக்கு உதவும் என்று
பத்திரப்படுத்தி வைத்ததோ?
 
எது எப்படியிருந்தாலும்
 
கண்ணெதிரே அடிபட்டுக் கிடக்கும்
முகந்தெரியா நண்பருக்காகவோ,
 
தாளாத பசியில் தளர்ந்திருக்கும் முதியவரின்
யானைப்பசிக்கு சோளப்பொறியாகவோ,
 
பள்ளிசெல்லும் குழந்தையின்
கட்டணத்தொகையில் ஒரு பகுதியாகவோ
 
முழுமனத்தோடு செலவழிக்கையில்
முன்னைக்கிப்போது புனிதமடைகிறது
பணப்பையில் பத்திரப்படுத்தப் பட்டதாய்
எண்ணிப் பக்குவமாய்ச் சிரிக்கும்
ஒரு நூறு ரூபாய்த் தாள்!
 
ஒவ்வொரு உறவுகளுடனான
சந்திப்பும் புதுப்பிக்கப்படட்டும்
புது ரூபாய்த் தாளுடன்...
 
இப்படியாய் சில ரூபாய்கள் எப்பொழுதும்
இருக்கட்டும் நம்மிடையே....
 
வாழ்க உறவுகள்!
வளர்க உதவிகள்!
 

Labels:

 
posted by Raghavan alias Saravanan M at 8/21/2007 04:54:00 PM, | 8 பின்னூட்டங்கள்