Friday, May 11, 2007

உலகோடு ஒத்து வாழாதவன்


இடங்களுக்கு இணக்கமாய் உடை,
உடைநிறத்திற்கேற்ப காலணி,
மாநிலத்திற்கேற்ப மொழி,
விழாவிற்கேற்ற விருந்து,
நாட்டுக்கு உகந்த கொடி!!
 
இது போல் அல்லாது
என் எல்லா ஜென்மங்களுக்கும்
என்றும் எப்பொழுதும்
நீயே எனக்கு உற்ற துணை!!
 
இந்த விஷயத்தில் நான்
உலகோடு ஒத்து வாழாதவன்!

Labels:

 
posted by Raghavan alias Saravanan M at 5/11/2007 03:25:00 PM, | 10 பின்னூட்டங்கள்
Thursday, May 10, 2007

அறிவுமதியின் நட்புக்காலம் - 2

உன் பிறந்த நாளுக்கான
வாழ்த்து அட்டைகளில்
நல்ல வாசகம்
தேடித் தேடி
ஏமாந்த சலிப்பில்
தொடங்கிற்று உனக்கான
என் கவிதை!

*

அடிவானத்தை மீறிய
உலகின் அழகு என்பது
பயங்களற்ற இரண்டு
மிகச்சிறிய இதயங்களின்
நட்பில் இருக்கிறது!

*

அம்மா அப்பாவிடம்
அறிமுகப்படுத்த
முதன்முதலாக என்னை நீ
உனது வீட்டிற்கு அழைத்துச்
சென்றிருந்த போது
வழக்கமான அம்மாக்களின்
சந்தேகத்தையொத்த பரிமாறலுக்கு
நடுவே..
"எப்போதும் இவன் உன்
மருமகனாக முடியாது!
ஏனெனில் இவன் என்
நிச்சயிக்கப்பட்ட நண்பன்!"
உன் குரல்
இப்போதும் கேட்கிறது
எனக்குள்!

*

கடற்கரையின்
முகம் தெரியாத இரவில்
பேசிக் கொண்டிருந்த நம்மை
நண்பர்களாகவே உணரும்
பாக்கியம் எத்தனை
கண்களுக்கு வாய்த்திருக்கும்

*

'எனக்கு மட்டும்' என்று
குவிகிற மையத்தையே
காம்பாக்கிக் கொண்டு
'வெளி'வாங்கிப்
பூக்கிறது நட்பு

Labels: , ,

 
posted by Raghavan alias Saravanan M at 5/10/2007 12:42:00 PM, | 6 பின்னூட்டங்கள்
Monday, May 07, 2007

புத்திசாலித்தனமான ஏமாற்றம்

 
உன்னை அழகுபடுத்துவதாய்
நினைத்து தமக்குத் தாமே
ஏமாந்து போகின்றன
லட்சணமும், களையும்
உன் மீதமர்ந்து தத்தம்
அழகினை அதிகரித்து!
 
ஏமாந்தாலும் இப்படித்தான்
புத்திசாலித்தனமாய் ஏமாறவேண்டும்!

Labels:

 
posted by Raghavan alias Saravanan M at 5/07/2007 03:47:00 PM, | 0 பின்னூட்டங்கள்
Thursday, May 03, 2007

தபூசங்கரின் 'தேவதைகளின் தேவதை' - 1

இந்த வலைப்பூவில் இது என்னுடைய '50-வது பதிவு' என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்ளுகிறேன். ஆதரவளிக்கும் அனைத்து நட்புள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.


தபூசங்கரின் 'வெட்கத்தைக் கேட்டால் என்ன தருவாய்?' என்ற புத்தகத்தை நான் 2002ம் ஆண்டு வாங்கினேன் என்று நினைக்கிறேன். அதுதான் அவரின் முதல் புத்தகம் என்றும் படித்ததாய் நியாபகம். நல்ல கவிதைகளின் தொகுப்பு. பிறகு அவர் நிறைய கவிதைகள், புத்தகங்கள் எழுதிவிட்டார்.

அவரின், 'விழி ஈர்ப்பு விசை' யும் மிக அருமையான காதல் கவிதைகளைக் கொண்ட புத்தகம்.

இந்த 'தேவதைகளின் தேவதை' ஆனந்தவிகடனில் வந்த கவிதைகளின் தொகுப்பு..

அவற்றில் சிலவற்றை உங்களுடன் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.


ஒரு தாய்
தன் குழந்தைக்குச்
சோறூட்டுகையில்
நிலவைக் காட்டுவது மாதிரி
காதல்
உன்னை எனக்குக் காட்டியது

*

எதற்காக நீ
கஷ்டப்பட்டுக் கோலம்
போடுகிறாய்?

பேசாமல்
வாசலிலேயே
சிறிது நேரம் உட்கார்ந்திரு
போதும்!

*

நீ எப்போதும்
தலையைக் குனிந்தே
வெட்கப்படுவதால்
உன் மதிப்புமிக்க
வெட்கத்தை எல்லாம்
இந்தப் பூமி மட்டுமே
தரிசிக்க முடிகிறது!

ஒரேயொரு முறை
கொஞ்சம் உன் தலையை நிமிர்த்தி
வெட்கப்படேன்!

வெகுநாட்களாய்
உன் வெட்கத்தைத் தரிசிக்கத்
துடிக்கிறது வானம்!

*

முனிவர்கள்
கடவுளைப் பார்ப்பதற்காகத்
தவம் இருக்கிறார்கள்.
நானோ,
ஒரு தேவதையைப்
பார்த்து விட்டுத்
தவமிருக்கிறேன்.

*

கர்ப்பக் கிரகம்
தன்னைத் தானே
அபிஷேகம் செய்து கொள்ளுமா
என்ன?

நீ சொம்பில் நீரெடுத்துத்
தலையில் ஊற்றிக் குளித்ததைப்
பார்த்ததிலிருந்து
இப்படித்தான் கேட்டுக்
கொண்டிருக்கிறேன்
என்னை நானே!

*

நீ யாருக்கோ செய்த
மெளன அஞ்சலியைப்
பார்த்ததும்...
எனக்கும்
செத்துவிடத் தோன்றியது.

*

நான் உன்னைக்
காதலிக்கிறேன்
என்பதற்காக
நீயும் என்னைக்
காதலித்து விடாதே!
என் கொடிய காதலை
உன் பிஞ்சு இதயத்தால்
தாங்க் முடியாது!

Labels: , ,

 
posted by Raghavan alias Saravanan M at 5/03/2007 02:10:00 PM, | 6 பின்னூட்டங்கள்