Friday, April 27, 2007

வேகாமல் கிட்டிய வேதாந்தம்

என்னுடைய ஏதோ
ஒரு அவசரத்திற்காக
அடுப்பிலிருக்கும் சட்டியை
வெகுவாகச் சூடுபடுத்தும்
சமயங்களில் எல்லாம்
"இப்படி நீ எத்தனை தடவை
உன்னைச் சூடுபடுத்தியிருக்கிறாய்?
பிறர்க்காக இல்லை
எனினும் உனக்காக!?"
என்று நெருப்பில்லாமல் சுடுகிறது
"சுர்.. சுர்..." என்ற
சட்டியின் அழுகுரல்!

Labels:

 
posted by Raghavan alias Saravanan M at 4/27/2007 02:43:00 PM, | 11 பின்னூட்டங்கள்

அறிவுமதியின் நட்புக்காலம் - 1

கவிஞர் அறிவுமதியின் 'நட்புக்காலம்' என்ற கவிதைத் தொகுப்பிலிருந்து எனக்குப் பிடித்த சில கவிதைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் நண்பர்களே.

அறிவுமதி நல்ல பாடலாசிரியரும் கூட. உதாரணத்திற்கு அவர் எழுதிய சில திரைப்படப் பாடல்கள் (எனக்குப் பிடித்தவை).

இளவேனிற்காலப் பஞ்சமி - 'மனம் விரும்புதே உன்னை' படத்தில்
பிரிவொன்றை சந்தித்தேன் - 'பிரியாத மனம் வேண்டும்' படத்தில்
காஞ்சிப்பட்டு சேலைகட்டி - 'ரெட்டை ஜடை வயசு' படத்தில்


(அட எல்லாப்பாட்டுக்களுமே ஹரிஹரன் பாடுனதுங்க ;-). அதுவும் அவரு மட்டுமே பாடுனது! என்ன ஒற்றுமை!)


இப்பொழுது கவிதைகளுக்குச் செல்வோமே......



நீ என்னிடம்
பேசியதை விட
எனக்காகப்
பேசியதால் தான்
உணர்ந்தேன்
நமக்கான
நட்பை...!


*

நீ வயசுக்கு வந்தபோது
தடுமாறிய என்
முதல் கூச்சத்திற்குக்
குட்டு வைத்து
நம் நட்பைக்
காப்பாற்றியவள் நீ!


*

நம்மைப் பற்றிய
ஆசிரியர்களின் சந்தேகங்களுக்குத்
துணையாய்ப் புத்தகங்களைப்
படபடக்கச் சொல்லிவிட்டு
நிதானமாய்ப் பேசிக்கொண்டிருந்தோம்
நாம்!


*

தாய்ப்பாலுக்கான விதை
காதலில் இருக்கிறது!
தாய்மைக்கான விதை
நட்பில் இருக்கிறது!


*

போகிற இடத்தில்
என்னை விட
அழகாய், அறிவாய்
ஒருவன் இருந்துவிடுவானோ
என்ற பயம்
நல்லவேளை
நட்பிற்கு இல்லை!

Labels: , ,

 
posted by Raghavan alias Saravanan M at 4/27/2007 02:08:00 PM, | 2 பின்னூட்டங்கள்
Tuesday, April 24, 2007

காதலின் மகத்துவம்

நீ உடுத்திவரும்
உடையின் நிறமே
எனக்கு அந்தந்த
தினத்தின் உகந்த நிறமாகிறது!

*

உன் அழைப்புக்கள் நிராகரிப்பு,
மின்னஞ்சல்கள் அவமதிப்பு,
குறுந்தகவல் புறந்தள்ளுதல்,
ஓரப்பார்வைகள் ஒதுக்குதல்
இப்படி என்னவாயினும் செய்வேன்
உன் செல்லக்கோபத்தைப் பெற!

*

'நீயில்லாத பொழுதுகளில்' என்ற
தலைப்பைக் கொடுத்து என்னை ஒரு
கவிதை எழுதச் சொன்னாய்!
எழுதிய கவிதையை நீ வாங்கிப்
பருகியதும் பல்கிப்பெருகியது நம் காதல்..
வெள்ளைத்தாளில் வெள்ளேந்தியாய்ச்
சிரித்தது ஒரு முற்றுப்புள்ளி!!

*

என் நினைவுகள் கலக்காமல்
உன் கவிதை எப்படியிருக்கும்? - நீ!
"கலப்படமில்லாமல் நான் - உன்
நினைவுகளை உள்வாங்கும் முன்!
சர்க்கரையாய் நீ எனக்குள்!
பாயாசமாய் நம் காதல்" - நான்!
ஊறுகாயாய் உன் பூக்கோபம்!
புளிப்பாய் உன் உதட்டுச்சுழிவு!
அறுசுவை உணவு ஆரம்பம் எனக்கு!

Labels:

 
posted by Raghavan alias Saravanan M at 4/24/2007 01:57:00 PM, | 6 பின்னூட்டங்கள்
Friday, April 20, 2007

அறிவான அழகு

 
நீ அமர்ந்து எழும்
ஒவ்வொரு ஆசனத்திலும்
உன் அழகு அங்கேயே
தங்கி விடுகிறதே என்ற
விசனத்தில் நானிருந்தேன்!
 
என்னை விடுத்து வேறு
எவரும் தன்மீது அமர
அனுமதிக்காது உன்
பின்னோடே வரப்
பழக்கியிருக்கிறாய் என்பது
பிறகு தான் புரிந்தது!!
 
உன்னைப் போலவே
உன் அழகும் அறிவானது!
 

Labels:

 
posted by Raghavan alias Saravanan M at 4/20/2007 11:18:00 AM, | 6 பின்னூட்டங்கள்
Wednesday, April 18, 2007

ஊமைக்கும் தண்டனை உண்டு!

உலகத்து மொழிகளை எல்லாம்
ஊமையாக்கி உடனிருப்பவர்
எவருக்குமே புரியாத வண்ணம்
உலாவரும் 'நம்'மொழி
செம்மொழி!!


இடம், பொருள்,
ஏவல் இவையெல்லாம்
தாமாகவே ஒருமுறை
தற்கொலையைச் சுவைக்கலாம்...


மொழிகளின் கொலைவழக்கில்
மடந்தையாய் இருந்தாலும்
உடந்தையாய் இருந்த காரணத்தினால்
நானும் ஒரு கைதியே!!!

Labels:

 
posted by Raghavan alias Saravanan M at 4/18/2007 04:24:00 PM, | 5 பின்னூட்டங்கள்
Wednesday, April 04, 2007

வாழ்வியல் வேதம் - இரண்டாம் பரிசு பெற்ற கவிதை

நண்பர்களே,

முந்தைய பதிவில் குறிப்பிட்டிருந்தபடி, சென்ற வருடம் நம்பிக்கை கூகிள் இணையக் குழுமம் அதன் முதலாம் ஆண்டு விழாவின் பொருட்டு நடத்திய கவிதைப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற என்னுடைய 'வாழ்வியல் வேதம்' என்ற கவிதையினை உங்களுடன் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

கவிதையினை நம்பிக்கைக் குழும வலைப்பூவிலும் காணலாம்.

உங்கள் ஊக்கத்திற்கும், நல்லாதரவிற்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தோழமையுடன்,
இராகவன் என்ற சரவணன் மு.


வாழ்வியல் வேதம்!
=================


நம்பு தம்பி நம்பு!
முயன்றால் இயலாதது எதுவுமில்லை!!

வாழ்வியல் விதிகள் சில சொல்ல
விழைகிறேன்!

(1) ஆசைப்படு
------------------------

உலகில் உருவாக்கப்பட்ட
அத்துணை விஷயங்களுக்கும்
'ஆசைப்படுதல்' ஒன்று தான்
மூலிகை!!!

ஆசை மட்டுமே பட்டுக்
கொண்டிருந்தால் பூசை நடக்காது!

சோம்பல் என்னும் கற்பூரம் கொளுத்தி
முயற்சி என்னும் ஊதுபத்தி ஏற்றி
நம்பிக்கை என்னும் விளக்கு வைத்து
உழைப்பு என்னும் பூசை நடத்து!!

பூசையின் புனிதம் காக்கப்பட
அவ்வப்போது ஆசை என்னும்
எண்ணெய் ஊற்று!!
அது தான் உன்னை அடுத்தடுத்த
குறிக்கோள்களை அடைய வைக்கும்
ஆனந்த ஊற்று!!

வெற்றி என்னும் பிரசாதம் உன் கையில்!!

(2) கோபப்படு!!
---------------------

உன் சுயத்தை எது
எள்ளி நகையாடுகின்றதோ,
சுட்டெரிக்கிறதோ,
அங்கே நீ அக்கினியாய் மாறு.

நிதானத்தோடு கூடிய
கோபத்தீ உமிழ்! ஆனாலும்
உன் சுயம் உன்னால் அங்கே
காக்கப்பட வேண்டும் மறவாதே!

தன்மானம் இல்லாத மனிதன்
உயிரில்லா உடல்!
நீரில்லா மீன்!
காலில்லாச் செருப்பு!!!
வயிறில்லா உணவு!!
விக்கிரகமில்லாக் கர்ப்பக்கிரகம்!

பிரயோசனமில்லை எதற்கும்!!

(3) பொறாமை கொள்!!
-------------------------------

உடனொத்தவர்களின் திறமையை
மட்டும் உன்னிப்பாய்ப் பார்த்து
ஆரோக்கியமான முறையில்
பொறாமை கொள்.....

பொறாமையே உன்னை
அயர விடாது உழைக்க வைக்கும்
புனிதமான சஞ்சீவி!!

விளக்கிற்கும் திரிக்கும் சேதாரம்
விளைவிக்காத தூண்டுகுச்சியைப்
போலப் பொறாமையைக் கையாள்...

விளக்கு - நீ!
திரி - உன் திறமை!
ஒளி - உன் வளர்ச்சி!
பொறாமை - தூண்டுகோல்!!

பொறாமை ஒரு ஆகாரம்!
ஒவ்வொரு வேளையிலும் வேண்டும்!
ஒவ்வொரு வேலையிலும் வேண்டும்!

(4) அவமரியாதை செய் !
-----------------------------------

கருத்துக்களுக்கும், எண்ணங்களுக்கும்
வருகின்ற பின்னூட்டங்களைப்
புன்னகைப் பூக்களைப்
பரிசளித்து வாங்கு!!

ஏனெனில் உன்னையே
ஒழுங்காகச் செதுக்கிட
உதவும் கண்ணாடிகள் அவை!!

கண்ணாடிகள், பார்க்கும்
கண்களையே கிழிக்குங்கால்
அவற்றை அகமகிழ்ந்து
அவமரியாதை செய்!!

தேவையில்லாமல் முடிவளர்த்துத்
தேம்பித் தேம்பி மொட்டை அடிப்பானேன்?
தலையே போன பிறகு
தலைப்பாகை எதற்கு?

(5) தட்டிப் பறி!!!
---------------------------

உரிமைகளை எக்கணமும்
நிரந்தரமாக யாரிடமும்
விட்டுவிடாதே!
விட்டுத் தராதே!!

அவையொன்றும் உன்னால்
மேற்பார்வையிட முடியாத அளவுக்குக்
கடினமானவையும் அல்ல!!
காரியதரிசிகள் கவனித்துக்
கொள்ளக் கூடிய செயலும் அல்ல!!!

தட்டிப் பறி!! எட்டிப் பிடி!!

முயற்சிகள் உடனே பயனளிக்காவிடில்
சற்றே விட்டுப் பிடி!!

சிங்கத்திற்குக் கர்ஜனை!
சூரியனுக்கு வெப்பம்!
குழந்தைக்கு மழலை!
பெண்மைக்குத் தாலி!!!

விட்டுக்கொடுத்தால் கெட்டுப்போகும்!
தன் நிலை கெட்டுப் போகும்!!


(6) எதிரிகளை வளர்த்துக் கொள்!!
-----------------------------------------------


உன்னைப் பற்றித் தவறுகள்
தெரிவிக்கப்பட்டால் தயங்காது கவனி!
உயர்வுக்கு வழிவகுப்பின்
தயைகூர்ந்து உட்புகுத்து!

அனைவருமே நண்பர்களாகிப் போனால்
என்றுமே ஒருவழிப் பாதை உன்னுடையது!

கீழே விழச்செய்யும் விசையின்
தரத்தைப் பொறுத்தே பந்து
மேலே எழும்பும் தோழா!

காயங்கள் வந்தால் மருந்தின் அருமை!
வெயில் வந்தால் நிழலின் மகிமை!
அரவு தீண்டினால் விஷமுறிவின் அருமை!
எதிரிகள் இருந்தால் வளர்ச்சியின் பெருமை!

அடித்துத் துவைக்காமல்
அழுக்கு அகலுமா?
கடித்துத் தின்னாமல்
கரும்பு இனிக்குமா?

என்றும் உன்னை எரிகின்ற
தீயாக வைக்க எதிரிகள் அவசியம்....!

(7) இழந்து பார்!!
--------------------------

வெற்றி வேண்டுமா?
வேட்கை இழந்திடு!!

நட்பு வேண்டுமா?
பிடிவாதம் இழந்திடு!!

தூக்கம் வேண்டுமா?
நினைவுச் சங்கிலி இழந்திடு!!

புதுப் பசி வேண்டுமா?
நேற்றைய உணவின் எச்சத்தை இழ!

ஆரோக்கியம் வேண்டுமா?
கவலை இழந்திடு!!!

வெற்றுச் சுதந்திரம் வேண்டுமா?
ஒழுக்கத்தை இழந்திடு!!
வெற்றிச் சுதந்திரம் வேண்டுமா?
வறட்டுக் கொள்கைகளை இழந்திடு!!!

சோர்வு வேண்டுமா?
சோம்பல் இழந்திடு!

தீர்வு வேண்டுமா?
விதண்டாவாதம் இழந்திடு!!

(8) வன்மம் கொள்!!
---------------------------

கண்ணெதிரே அநியாயம்!
கண்டிப்பாய்ப் பொறுமை இழ!!
புலன்களுக்கு மட்டுமல்ல உணர்ச்சி!
பிறர் நலன்களுக்கும் சேர்த்துத் தான்!

எங்கே முதுமை மிதிக்கப்படுகிறதோ
அங்கே உன் பொறுமையைப்
பொசுக்கிப் பொங்கி எழு!!

எங்கே தாய்மை தரந்தாழ்த்தப்படுகிறதோ,
எங்கோ பெண்மையின் புனிதம்
போற்றப்படவில்லையோ,
அங்கே நீ அகிம்சையின்
ஜென்ம விரோதியாகு!

தன்மானம் எங்கே தலைசாய்க்கப்படுகிறதோ
உன் தலைக்கனத்திற்குச் தயங்காது சூட்டு
ஒரு தங்கக்கிரீடம்!

இடித்தால் தான் இடிக்கு மதிப்பு!
கடித்தால் தான் தேளுக்கு மதிப்பு!
சுட்டால் தான் சூரியனுக்குச் சிறப்பு!
சினங்கொண்டால் தான் மனிதனுக்கு மதிப்பு!

உண்மைக்குப் புறம்பான
விஷயங்கள் உன்னைச் சுற்றி நடக்கையில்
உனக்கான ஒற்றை வரி வேதம்!!
"நீ கொண்ட மிகப்பெரிய பொறுமை
உன் வாழ்நாளில் முதல் பத்து மாதம்!"

காற்றைக் கிழித்துத் தான் பேசுகிறாய்!
தசைகளை இறுக்கித் தான் உண்ணுகிறாய்!

(9) காதல் செய்!
--------------------------

உண்மையாகவும் நேர்த்தியாகவும்
இருந்தால் மட்டுமே இனிக்கும்!

உன்னைப் பெற்றெடுத்த தெய்வங்களைப்
பேணிப் பாதுகாக்கும் பண்பின் மீது
பாரபட்சமில்லாது காதல் கொள்!!

உன்னை நேசிக்கும் ஒவ்வொரு
உயிருக்கும் பரிசுத்தமான பாசத்தைப்
பரிசளிக்கும் பாங்கின் மீது
பாகுபாடில்லாது காதல் கொள்!!

தக்க தருணத்தில் செய்த
உதவிகளுக்கு உயிரின் கடைசிச் சொட்டு
ஊறும் வரை உண்மையான நன்றி காட்டும்
அந்த உயரிய பண்பின் மீது காதல் கொள்!

உன்னதமான நெறியில் நல்வழிப்படுத்தும்
ஆன்மிகத்தின் மீது ஆறாத காதல் கொள்!!

முடிந்தளவு சிறு சிறு உதவிகளைச் செய்ய
உன்னை ஒப்புக்கொடுக்க ஒத்துழைக்கும்
அந்த தன்னலமற்ற தன்மையின் மீது
தளர்வில்லாக் காதல் கொள்!!!

கொண்ட நம்பிக்கைகளைக் காப்பாற்ற
சில சமயங்களில் இழப்புக்களை ஏற்றுக்
கொள்ளும் அந்தத் தியாகத்தின் மீது
திடமான காதல் கொள்!!

(10) பொய் பேசு!
------------------------

திட்டவட்டமான வாழ்க்கையை விட்டுத்
எட்டிப் போகச் செய்யும் எந்தவொரு
கொள்கையிடமும் நீ அதற்கு இணங்க
முடியாதென்று முழுமூச்சோடு பொய்பேசு!

இழந்ததற்கெல்லாம் வருந்த மட்டுமே
வைக்கும் எண்ணங்களுக்கு நான் உங்கள்
அழுகுரலுக்குக் காது கொடேன் என்று
கண்ணியமாய்ப் பொய் பேசு!!!

நடைமுறைப் படுத்த முடியாத
சிந்தனைகள், ஊருக்கு மட்டுமே போதிக்கும்
உபாசனைகள், முகத்திரை அணிவிக்கும்
பாராட்டுக்கள் இவை அனைத்திற்கும்
இனி நான் இறங்கி வர மாட்டேன் என்று
இன்முகத்தோடு் பொய் பேசு!!!

உன்னால் முடிந்த நன்மைகளைச்
செய்ய விடாமல் தடுக்கும் கயமைகளுக்கு
நீ சுயநலவாதி என்று சூசகமாய்ப்
பொய் சொல்!!

கடமையைச் செய்யவிடாது தட்டிக்கழிக்க
வைக்கும் சோம்பேறி இயல்புகளிடம்
நான் தலைசாய்க்க மாட்டேன் என்று
தயங்காது பொய் சொல்!!

Labels: , , ,

 
posted by Raghavan alias Saravanan M at 4/04/2007 03:43:00 PM, | 9 பின்னூட்டங்கள்