Thursday, March 22, 2007

இனிது இனிது காதல் இனிது - முதற்பரிசு பெற்ற கவிதை

நண்பர்களே,

'இனிது இனிது காதல் இனிது' என்ற இந்தக் கவிதை, 'நம்பிக்கை' என்ற இணையக் குழுமம் அதன் இரண்டாம் ஆண்டுவிழாவின் பொருட்டு நடத்திய கவிதைப்போட்டியில் முதற்பரிசு பெற்றுள்ளதைத் தெரிவித்து, உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

சென்ற வருடம் நடத்திய போட்டியில், 'வாழ்வியல் வேதம்' என்ற என்னுடைய கவிதை இரண்டாம் பரிசினைப் பெற்றது. அதனை அடுத்த பதிவில் இடுகிறேன் [மிகமிகத் தாமதமாக ;-((( ]

படித்துவிட்டுத் தங்கள் மேலான கருத்துக்களைக் கூறவும்.

தோழமையுடன்,
இராகவன் என்ற சரவணன் மு.


கவிதை இதோ....


இனிது இனிது காதல் இனிது
=========================


உன் உருவப்படத்தை
முன்னிருத்தி எனக்கான
பொழுது ஆரம்பிக்கவில்லை!

என் பெயரைச் சுப்ரபாதமாய்ச்
சிணுங்கி நீ பல்துலக்கவில்லை!

உடலுக்காக ஒரு உடை,
உணர்வுகளுக்காக ஒரு உடை
என்று நம் உடைகளுக்குள்
ஒரு கார்கில் போர் மூளவே இல்லை!

கோபத்தில் ஒரு விழுக்காடு,
கொரிக்கும் பருக்கையில் காட்டாது
வயிற்றுக்கு வஞ்சகமின்றி
அன்றைய பொழுதின் ஆகாரத்திற்காய்
அகமகிழ்ந்து உண்கிறோம்!

வீட்டிலிருந்து கிளம்பி
கல்லூரிக்கோ, அலுவலகத்திற்கோ
செல்லும் வழியில், ஏற்கெனவே
கைதியான கையடக்கத்
தொலைபேசியைக் கசக்கிப்பிழிந்து
காற்றைக் கற்பழிக்கவுமில்லை!

கலந்துரையாடல்களைக் கலைக்கும்
வண்ணம் கற்பனைச் சிறகுகளைக்
கட்டுக்கடங்காமல் சுற்றிவர விடவில்லை!

உரையாடல்களுக்கு நடுவே
மும்முரமாகத் தோள்களைத் தட்டி
எந்த உலகத்தில் இருக்கிறாய் என்று
எதிராளி கேட்குமளவுக்கு
இயல்புநிலை இழக்கவுமில்லை!

இருக்கின்ற இயற்கைச் செல்வங்களை
ஒற்றுமை வேற்றுமை பார்த்து
ஓவியமாகக் கவிபுனைந்து அவற்றை
வம்புக்கு இழுக்கவுமில்லை!

நனவில் நர்த்தனமாடிய பெயரே
உறக்கத்தில் உளறப்படக்கூடாதே
என்று உறைபோடவுமில்லை!

காலை எழுந்ததிலிருந்து
இரவு தூங்கும் வரை
நான் நானாகவேயும்
நீ நீயாகவேயும்
நிம்மதியாக இருக்கிறோம்!

உனதான செயல்கள் எதனிலும்
என் எண்ணங்கள்
நுழைக்கப்படவில்லை..

எனக்கான இயல்புகள் எதிலும்
உன் நினைவுகள் என்னை
உபத்திரவம் செய்வதில்லை..

இது என்ன வித்தியாசமாய்?
இப்படியும் ஒரு காதல் செய்வோம்!

நினைவுகளைச் சங்கடப்படுத்தாது
சங்கமிக்க விடுவோம்!

அவரவர் கடமைகளை
அல்லல் படுத்தாது
அழகாய்ச் செய்வோம்!

பிறகெப்படி காதல் வளருமாம்?
நல்ல கேள்வி தோழி!

அட்டைப்பெட்டிக்குள் வைத்து
அடுக்கித் திணிக்கும்
அலங்காரப்பொருளா காதல்?

எல்லா வேலைகளிலும்,
எல்லா வேளைகளிலும்,
இடையறாது நினைக்கிறேன் என்று
காதலை மட்டும் நினைத்துக்கொண்டு
கடமைகளைக் கோட்டை விடுவதா
கற்புள்ள காதல்?

பெற்றவர்க்கும், உற்றவர்க்கும்,
மற்றவர்க்கும் எதிலும்
பங்கம் விளைவிக்காத
பவித்ரமான ஒரு அங்கமே
வாழ்வில் காதல்!

காதலின் பெயரால்
காதலுக்குக் களங்கம்
கற்பித்த நிலையை மாற்றிக்
காதலைக் கெளரவிப்போம்!

அகத்துள் பூத்த
ஆழமான காதல்
அதற்கான நேரத்தை
அற்புதமாய் ஒதுக்கிக்கொள்ளும்!

Labels: , , , ,

 
posted by Raghavan alias Saravanan M at 3/22/2007 05:22:00 PM, | 11 பின்னூட்டங்கள்